Showing posts with label animation film. Show all posts
Showing posts with label animation film. Show all posts

Wednesday, February 23, 2011

kung Fu Panda :குங்பூ பண்டா விமர்சனம்

குங்பூ பண்டா : விமர்சனம்



நான் அதிகமாக பிசேர் ரின் கார்ட்டூன் படங்கள் தான் பார்ப்பேன்.ஆனால் சும்மா விளையாட்டாய் பார்க்க ஆரம்பித்து இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.

குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை. படம் 1 1/2 மணி நேரமும் வயிறு குலுங்க வைக்கிறது.



டிரிம்வொர்க்ஸ் ஸ்டுடியோவிலிருந்து 2008-ல் வெளிவந்த படம்தான் “குங்பூ பாண்டா”. அமைதி பள்ளத்தாக்கு (Valley of Peace) என்ற கிராமத்தில் தனது தந்தையுடன் நுாடுல்ஸ் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் கொழுகொழு பாண்டா போ-விற்கு மிகப் பெரிய குங்பூ மாஸ்டர் ஆகவேண்டுமென்ற கனவு. டை லங் என்ற ஒரு மோசமான குங்பூ மாணவனால் வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பதற்காக பிரபல குங்பூ பள்ளி ஆசான்கள் அந்த வருடம் அந்த பள்ளத்தாக்கின் குங்பூ சாம்பியனை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்துகின்றார்கள்.

அங்கே நுாடுல்ஸ் விற்க போகின்ற போ-வே சாம்பியன் என தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு குங்பூ கலையை கற்றுக் கொடுக்க அந்த மடாலாய சின்ன மாஸ்டரும் அவரின் சீடர்கள் (பாம்பு, குரங்கு,புலி, மேன்டிஸ்) போன்றவர்கள் படும் பாடு உங்களை கண்டிப்பாக விலாநோக சிரிக்க வைக்கும். போ-வும் டை லங் என்கிற பனிச் சிறுத்தையும் மோதும் கடைசி யுத்தமும் பிரமிக்க தக்க வகையில் படமாக்க பட்டிருக்கும்.



படத்தின் சிறப்பம்சம் உரையாடல் எனலாம். எல்லோருக்கும் பெரிய மாஸ்டரான ஒகுவே ( ஆமை) போ-விடம் ஒரு மரத்தின் கீழ் பேசும் உரையாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
Yesterday is history,
tomorrow is a mystery,
but today is a gift.
That is why it is called the Present

இந்த படங்கள் ஏன் தமிழ்நாடு முழுவதும் டப் செய்து திரையிட படவில்லை என தெரியவில்லை. தயவு செய்து குழந்தைகள் மட்டுமே பார்க்கும் படம் என நினைத்து விடாதீர்கள். உங்கள் மனதை மிகவும் லேசாக ஆக்கும் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

ரொம்ப எளிமையான கதை, அதை வழக்கமான சைனீஸ் டைப் திரைக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதம் கலக்கியிருக்காங்க. நகைச்சுவையை அங்க அங்க தூவாம , படம் முழுக்க, கடைசி நொடி வரை சிரிச்சிகிட்டே இருக்க வைக்கும் அளவுக்கு இருக்கு. அசத்தலான பின்னணி இசை, டைமிங் டயலாக், நுணுக்கமான அசைவுகளை துல்லியமாய் காமிக்கும் அனிமேஷன். சொல்லிகிட்டே போலாம், போய் பாருங்க.முக்கியமாக இந்த பண்டா கரடியை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும் .



எல்லாத்தையும் விட இன்னும் ஆச்சர்யப்பட வைத்த விஷயம், இந்த 1:30 மணி நேர படத்துக்கு பின்னால இருந்த மனிதர்கள், எத்தனை பேர், எத்தனை வித விதமான வேலைகள்... டைட்டில் போடுறாங்க போடுறாங்க போட்டுட்டே இருக்காங்க. Hollywood பிரபலங்கள் (Angelina Jolie,jackie chan,Jack Black etc) அனைவருமே இந்த கார்ட்டுன் கதாபாத்திரங்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

கண்டிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்த்து சிரிக்க வேண்டிய படம்.


இந்த வருடத்தில் குங்பூ பண்டா - 2 ரிலீஸ் ஆகிறது.அதன் ட்ரைலர் இங்கே.

Saturday, January 29, 2011

பைண்டிங் நீமோ : விமர்சனம் ( Finding nemo)



Finding Nemo - உலக புகழ் பெற்ற Animation படம். Oscar award மற்றும் 34 விருதுகள் ,35 nomination வாங்கிய படம்.Pixar - இன் படைப்பு .

இந்த படத்தின் கதை என்னவென்றால் நீமோ (A clown fish)முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.

"உடனே நீமோ வளர்ந்து அந்த சுறா மீனை பழி வாங்குகிறான். ஹலோ இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா நிறைய விஜயகாந்த் படம் பார்க்கறீங்கன்னு அர்த்தம். அதை எல்லாம் மறந்துடுங்க. :) lol இது தமிழ் படமோ விஜயகாந்த் படமோ அல்ல "

இதனால் தன்னுடைய ஒரே உறவான நீமோவை அவனுடைய தந்தை ரொம்ப பாதுகாப்பு உணர்வுடன் வளர்க்கிறார். நீமோவின் ஒரு செதில் வேறு சிறியதாக போய் விடுவதால் அது வேறு நீமோவின் தந்தைக்கு கவலையாகி விடுகிறது.



பாதுகாப்பு உணர்வு அதிகமாகி நீமோவை வெளியிலேயே விடாமல் அவனை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்.

நீமோவின் பிடிவாதத்தால் அவனைப் பள்ளியில் சேர்க்கிறார் அவன் தந்தை. பள்ளியில் கேலிக்கு ஆளாகும் நீமோ தன்னை நிரூபிப்பதற்காக சென்று ஒருவரின் வலையில் சிக்கி கொள்கிறான். அவர் அந்த மீனை தன் தொட்டியில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்று விடுகிறார்.

அங்கு நீமோவின் பள்ளி செயல்களை ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நீமோவின் தந்தை அந்த படகை பின்பற்றி செல்லத் தொடங்குகிறார் ஆனால் படகு வேகமாக சென்று விடுகிறது.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த டோரியை ஒரு படகைக் கண்டாயா என்று நீமோவின் தந்தை கேட்க ஆம் இந்தப் பக்கம் சென்றது என்னைப் பின் தொடர் என்று சொல்லி வேகமாக செல்லத் தொடங்கும் டோரி சிறிது தூரம் சென்று மெதுவாக செல்லத் தொடங்குகிறது. நீமோவின் தந்தை ஏன் மெதுவாக செல்கிறாய் என்று கேட்க நீ யார்? என்று கேட்பதில் இருந்து காமெடித் திருவிழா ஆரம்பிக்கிறது.



அப்பொழுது தான் தெரிகிறது டோரிக்கு short term memory loss என்று. கஜினியில் சூர்யாவுக்கு இருந்ததே அதே வியாதிதான். ஆனால் நம்ம சூர்யா மாதிரி சிரியஸான ஆசாமி இல்லை ஜாலியான optimistic மீன்.

அப்பொழுது டோரிக்கு அந்த படகு விட்டுச் சென்ற அடையாளப் பலகையில் இருந்த முகவரியைப் படித்து நீமோவின் தந்தைக்கு சொல்கிறது. அதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த முகவரி டோரிக்கு ரொம்ப நேரம் ஞாபகம் இருக்கிறது.

அதனால் டோரி நீமோவின் தந்தை அருகில் இருந்தால் தன்னுடைய நிலைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நீமோவின் தந்தைக்கு உதவி செய்வதற்காக அவருடனே அந்த முகவரி குறிப்பிட்ட சிட்னிக்கு செல்ல ஆரம்பிக்கிறது.

முதலில் டோரியின் கூட வர விரும்பாத நீமோவின் தந்தை வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். அங்கிருந்து நீமோவைக் கண்டுபிடிக்க செய்யும் பயணம் தான் கதை.



நடுவில் சைவமாக விரும்பும் சுறாக்கள், super cool ஆமைகள் என்று அவர்களின் பயணம் 11/2 மணி நேரம் ஒரு மாஜிக் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.


கள்ளம் கபடமில்லாததால் டோரி அதன் குழந்தைத்தனம், எல்லாமே நல்லது என்று எடுத்துக் கொள்ளும் அதனுடைய பாத்திரம், மனிதன் குழந்தைப் பருவத்தை ஏன் விரும்புகிறான் ஏன் குழந்தைத்தனம் என்பது முக்கியம் என்பதை எல்லாம் நமக்கு சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக ஒரு திமிங்கலத்திடம் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பும் டோரி அதனுடன் திமிங்கல பாஷையில் பேசுவதாக சொல்லி சிட்னி செல்வது எப்படி என்று கேட்கிறது.

அந்தத் திமிங்கலம் டோரியையும், நீமோவின் தந்தையையும் விழுங்கி விடுகிறது. நீமோவின் தந்தை டோரியை கடிந்து கொண்டு உனக்கு திமிங்கல பாஷை எல்லாம் தெரியாது என்று திட்டிக் கொண்டிருக்கும் சமயம் அந்தத் திமிங்கலம் அவர்களை சிட்னியில் இறக்கி விடுகிறது.

இது போல டோரியின் பல காட்சிகள் கள்ளம் கபடமற்ற வாழ்க்கையைப் பற்றி ஏங்க வைத்து விடுகிறது.



கடைசியாக இந்தப் படத்தை எடுத்த பிக்ஸர் நிறுவனம் பற்றி சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு நிறைவு பெறாது.

Toy story, Bugs life, Monstors Inc, Incredibles, Cars இதுதான் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் இவைகளைப் பார்த்திருந்தால் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை ஒரு படம் கூட பிளாப் ஆகாமல் சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம். உங்களுக்கு கார்ட்டூன் பிடிக்கும் என்றால் மேலே உள்ள எல்லாப் படங்களையும் கட்டாயாம் பார்த்தே ஆக வேண்டும்.

டிஸ்னி நிறுவனம் பிக்ஸாரின் ஷேர்களை ரெக்கார்ட் விலையில் வாங்கி உள்ளது. இது பிக்ஸாரை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதே தரத்துடன் படங்கள் வர வேண்டும் என்பது என் போன்ற சினிமா ரசிகனின் ஆசை.குடும்பத்துடன் இணைத்து குழந்தையாய் ரசிக எற்ற படம்.

இது ஒரு மறுபதிவு நன்றி : http://rasithathu.blogspot.com

Friday, January 28, 2011

கார்ஸ் : விமர்சனம் (Cars)



கார்ஸ் :Pixar studio -வின் மற்றும் ஒரு அனிமேஷன் படம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன… இன்னும் எத்தனையோ..

வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..

அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..



பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.

இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக “கார”ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.



தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.

ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்



படம் பார்த்துவிட்டு வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் “ஏன் கண், வாய் இல்லை?” என்று யோசிக்கத் தோன்றும். கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு நமக்கும் வரும்.

இது ஒரு மறுபதிவு நன்றி :http://pookri.com

Thursday, January 27, 2011

வால் - ஈ : விமர்சனம் (wall - E)


போர் அடிக்கும் போது இந்த படம் பார்த்தேன்.இந்த படம் என்னை ரொம்ப impress பண்ணி விட்டது.இதோ இதன் விமர்சனம்,கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.Don't miss it.

நம் உலகம் மற்றும் அதன் அழிவு தரும் அச்சம் அனைவருக்குமே பொதுவானவை . இன்றைய சுற்றுசூழலின் நிலை அனைவரும் அறிந்த ஒன்று , நாம் சுவாசிக்கும் காற்றாகட்டும் , அல்லது குடிக்கும் நீராகட்டும் , ஏன் ஓஸோன் மண்டலத்தில் விழுந்து வரும் துளையால் நம் மேல் விழுகின்ற சூரிய ஒளி கூட நமக்கு ஆபத்தை விளைவிப்பதாய் மாறி வருகிறது . இந்நிலை என்றுமே குறையாது , அது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமேயுள்ளது . இந்நிலை இன்னும் சில வருடங்களில் அதிகமாகி நம்மை இவ்வுலகத்தில் வாழ இயலாத ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் . எங்கும் சுவாசிக்க இயலாத விஷவாயுவால் சூழப்பட்டு ஒரு உயிர் இப்பூவலகில் வாழ இயலாத ஒரு நிலை .

அப்படி ஒரு சூழலில்தான் இப்படம் துவங்குகிறது , உலகத்தில் இருக்கும் மனிதர்கள் தங்களது அயராத உழைப்பால் நம் உலகத்தை ரசாயன கழிவுகளின் குப்பையாக்கி அதன் பலனாய் தானே அழிந்து போன நம் உலகம் , அங்கே எல்லாம் இரும்பு கழிவுகள் அக்கழிவுகளை அகற்றும் பணிக்கு வால்-இ எனப்படும் ரோபோக்கள் . மனித அழிவிற்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கடந்த பின் உலகில் உயிரினங்கள் அற்ற சூழலில் சூரியசக்தியில் இயங்கும் இந்த வால்-இ ரோபோக்களும் அழிந்து அவ்வகையில் ஒன்று மட்டும் தனித்து தனது அன்றாட வேலையான குப்பை அகற்றுதலை செய்துகொண்டிருக்கிறது .



அந்த வேலைகளுக்கு நடுவே புதிதாக வித்யாசமான பொருட்கள் தென்பட்டால் அதையும் தன்து சிறிய குடோனில் அடைத்து வைத்துக்கொண்டு , ஒரு கரப்பானின் துணையோடு வாழ்கிறது ! . தனது உதிரிபாகங்களையும் கூட பாதுகாத்து வைத்துக்கொண்டு ஒரு மிகப்பழைய அமெரிக்க திரைப்படத்தின் பாடல்காட்சி அடங்கிய ஒரு வீடியோ டேப்பை வைத்துக்கொண்டு தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அந்த படத்தை பார்க்கிறது , அதில் காதலர்கள் கைகோர்த்து தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் இதுவும் தனது இயந்திரகைகளை கோர்த்தபடி தனக்கு அது போல ஒரு துணையில்லையே என வருந்துகிறது.

பின் அங்கு வரும் ஒரு வேற்றுகிரக ரோபோவும் , அதனுடனான வால்-இ யின் காதலும் அதனைதொடர்ந்து வரும் காட்சிகளும் இறுதியில் வால்-ஈ யிம் அந்த பெண் ரோபோவும் இணைந்தனரா , அவர்களது இரும்புகைகள் இணைந்ததா என்பது கிளைமாக்ஸ் .
படத்தின் முதல் 30 நிமிடங்கள் எந்த வித வசனங்களும் இன்றி வெறும் காட்சிகளிலேயே படத்தை கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கிய விடயம் . ரஜினிகாந்த் படத்தைக்கூட வசனமில்லாமல் முதல் அரைமணிநேரம் நம்மால் பார்க்க இயலுமா என தெரியவில்லை ஆனால் முதல் அரை மணி நேரமும் ,அதில் இடம் பெரும் காட்சிகளையும் சார்லி சாப்ளினின் அக்கால பேசாப்படங்களோடு ஒப்பிடலாம் . அத்தனை நேர்த்தி அவ்வளவு அழகு , முதல் அரை மணிநேரமும் படத்தில் வசனங்களே இல்லை என்பதை நாம் உணர்வதற்குள் காட்சிகள் வேகமாய் ஒரு மணிநேரத்தை தாண்டிவிட்டிருக்கின்றன.



சார்லி சாப்ளின் படங்களில்(சிட்டிலைட்ஸ் ) காணவல்ல நகைச்சுவையுடன் கூடிய ஒரு சோகமான காதலை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பது அருமை.

படத்தில் இரண்டு இயந்திரங்களையும் அதன் பாலினத்தையும் அதன் உணர்வுகளையும் முக அசைவுகளையும் உடலசைவு மொழிகளையும் மிக அருமையாகவும் துல்லியமாகவும் வடிவமைத்திருக்கின்றனர் . நிச்சயம் இவ்வகை முகமற்ற ரோபோக்களில் பாலினம் அறிவது மிக கடினமான விடயம் .

இத்திரைப்படம் முழுவதும் விரவியிருக்கும் சுற்றுசூழல் மீதான அக்கறை வியக்கவைக்கிறது , குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் இப்படி ஒரு முயற்சி நமக்கு விந்தையாக இருந்தாலும் , நாம் வெட்டி விட்டு போன மரத்தின் நிழலை தேடும் நாளைய சமுதாயம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனை இது .இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியோர்களுக்கும் ஏற்ற வகையில் ஆக்சன் , ரொமான்ஸ் , சென்டிமென்ட் என கலந்து கட்டி அடித்திருப்பது , நமது மசாலா வகை ரசிகர்களுக்கும் பிடிக்கும் .

படத்தின் நாயகன் வால்-ஈ யின் தனிமையையும் அது தரும் ஒரு வெறுமையான ஒரு சூழலையும் முதல் இரண்டு காட்சிகளிலேயே புரியவைத்து விடுகின்றனர் .

உலகை நாசமாக்கும் இயந்திர வாழ்க்கையையும் அது தரும் சுகத்தால் நாம் அழித்து வரும் இவ்வுலகம் குறித்தும் இப்படி ஒரு சூழலில் அழியவிருக்கும் மனித குலத்தை ஒரு இயந்திரம் காப்பாற்றுவது போலவும் திரைக்கதை அமைத்தமைக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
படத்தினூடே இழையோடும் இசை ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்துணை சிரத்தையா என வியக்கவைக்கிறது .



படம் பற்பல கருத்துக்களை கூறினால் எந்த இடத்திலும் அலுப்பின்றி ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வின்றி நம்மை ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அடுத்து என்ன என்னும் ஒரு சஸ்பென்ஸோடு கதை நகர்வது அருமை .

ஒரு முழுமையான அறிவியல் புனைக்கதையை சார்ந்த இந்த அனிமேசன் திரைப்படம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் .

இது ஒரு மறு பதிவு - நன்றி www.athishaonline.com