Friday, July 23, 2010

“Hostel” – திரைவிமர்சனம்

எச்சரிக்கை: ஹாரர் திரைப்படங்கள் பிடிக்காதவங்களும், பயந்த சுபாவம், இளகிய மனம் கொண்டவர்கள் அப்படியே அப்பீட்டு ஆகிக்குங்க படித்து விட்டு என்னை திட்டக்கூடாது.
நானும் எத்தனையோ பயங்கரமான ஹாரர் படம் (ரசிகன்) எல்லாம் பார்த்து இருக்கிறேன், எதற்கும் பயப்படமாட்டேன். எனென்றால் அந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு குறைவு என்பதால்.




இந்த படத்தோட கதை என்னன்னா மூன்று அமெரிக்க இளைஞர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா வருகிறார்கள், அங்கே ஒரு பெண் ப்ரோக்கரின் தூண்டுதலால் ஸ்லோவேகியா செல்கிறார்கள், அங்கே மூவரில் ஒருவர் காணாமல் போய் விட அவரை தேடும் முயற்சியின் போது இன்னொருவரும் காணாமல் போக எஞ்சி இருக்கும் ஒருவர் என்ன ஆனார் என்பதே கதை.


இதிலென்னயா பயப்படுற மாதிரி இருக்குன்னு உடனே அவசரப்பட்டு கேட்டுடாதீங்க..இனி மேல் சொல்ல போறது தான் வயிற்றை கலக்கும். இங்கே ஒரு கும்பல் ஒன்று செயல் பட்டு வருகிறது, அதற்க்கு “ஷாஷா” என்பவன் தலைவன் அவர்கள் இவர்களை போல ஆட்களை கடத்தி அறையில் வைத்து விடுவார்கள் . இதற்க்கு பலர் உடந்தை அந்த ப்ரோக்கர் உட்பட. இப்ப உங்களுக்கு யாரையாவது கொல்லனும் இல்ல கொடுமை பண்ணனும்னு நாம பேச்சுக்கு சொல்வோமில்லையா, அந்த பெண்ணை கற்பழிச்சவன் மட்டும் கிடைத்தானா அவனை துண்டு துண்டா வெட்டி போட்டுடுவேன் அப்படின்னு, அது மாதிரி இல்லாம சும்மாவே யாரையாவது டார்ச்சர் செய்யணும் என்று நினைக்கிற சைக்கோ ஆளுங்களுக்கு தான் இந்த கும்பல். பின்பு இவர்களுடைய கஸ்டமர்களுக்கு!! இவர்களிடம் சிக்கிய நபரின் படம் அனுப்பி ஏலம்!!! நடத்துவார்கள் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு இங்கு மாட்டினவங்க சொந்தம், அப்புறம் அந்த நபர் அங்கே போய் சிக்கிய நபரை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்….என்ன வேண்டும் என்றாலும் என்றால், என்ன வேண்டும் என்றாலும் தான். யப்பா! இதை கேட்டாலே கண்ணை கட்டுதா.


ஒரு பெண்ணை கற்பழிக்க வேண்டுமா முழு பாதுகாப்புடன் செய்யலாம், ஒருத்தன் கை தனியா கால் தனியா எடுக்கனுமா நோ ப்ரோப்ளம், ஒருத்தன் வயித்துல என்னெல்லாம் இருக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணனுமா டூல்ஸ் தயாரா இருக்கு. எனக்கு படம் பார்த்து மயக்கம் வராத குறை தான். இந்த மூவரில் ஒருத்தன், ஒரு கிறுக்கன் கிட்ட மாட்டிக்குவான், அவனுக்கு என்ன ஆசை னா பெரிய அறுவை சிகிச்சை நிபுணர் ஆகனும்னு, ஆனா முடியாது அதனால தொழில்ல இறங்கி நிறைய சம்பாதித்தாலும் இந்த ஏக்கம் இருப்பதால் இப்படி பணம் கட்டி இவனை பிடித்து தன் ஆசையை தீர்த்துக்குவான், அந்த பய்யனை கட்டி வைத்து அவன் பண்ணுற டார்ச்சர்! கொடுமையிலும் கொடுமை.


இதனுடைய இரண்டாம் பாகத்தில் இந்த மூன்று பசங்க மாதிரி மூன்று பொண்ணுக..முதல் பாகத்தில் இந்த கொடுமையான இடத்தில் இருந்து தப்பி விட வாய்ப்புகள் இருக்கும் இந்த மூவரில் ஒருத்தன் தப்பித்தும் விடுவான், ஆனால் இரண்டாம் பாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கனவில் கூட தப்பிக்க முடியாதபடி வடிவமைக்கப்பட்டு இருக்கும், அப்படி இருந்தும் ஒரு பெண் அதில் இருந்து வெளியே சென்று விடுவாள்..செம கலக்கலாக இருக்கும், உண்மையிலேயே விறுவிறுப்பாக எடுத்து இருப்பார்கள், கூடவே மிக கொடுமையாகவும். தலைவர் பாணில சொல்றதுனா சும்மா அதிரும்.


இந்த படம் முழுவ்தும் ஸ்லோவேகியா நாட்டில் நடப்பதாக காட்டி இருக்கிறார்கள், எனக்கு இப்ப ஸ்லோவேகியா என்றாலே பயம் ஆகி விட்டது இந்த படத்தை பார்த்த பிறகு. பொதுவாக ஹாரர் படம் என்றால் காட்டில் யாராவது கோரமான முகத்தோடு இருப்பதாக தான் வரும் அதனால் இயல்பு வாழ்க்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால் எனக்கு பயமாக இருக்காது. ஆனால் இது நிஜ மனிதர்கள் நம்முடனே உலவும் சாதாரண மனிதர்கள் இதை போல செய்வதாக காட்டி இருப்பதால் எனக்கு பீதி ஆகி விட்டது.இந்த படத்தை அந்த நாட்டின் அரசு எப்படி திரையிட அனுமதித்தது என்று தெரியவில்லை. இந்த படம் பார்க்கும் எவரும் ஸ்லோவேகியா பக்கம் கூட போக மாட்டார்கள் அந்த அளவுக்கு பயமுறுத்துகிறது.




இந்த படம் பற்றி சில குறிப்புகள்:

* இதில் பல டார்ச்சர்கள் உள்ளது நான் எதையும் கூறவில்லை மேல கூறிய ஒன்றை தவிர (அதிலும் பாதி தான் கூறினேன்) மீதி எல்லாம் கொடூரத்தின் உச்சம், அதை எல்லாம் கூறவே முடியாது. இதை போல படங்களில் “saw” படம் தான் மிக பிரபலம் அதை எல்லாம் இது தூக்கி சாப்பிட்டு விட்டது.
* இந்த இடத்திற்கு யார் பணம் கட்டி வந்தாலும் அவர்களுடைய சின்னத்தை பச்சை குத்தி கொள்ள வேண்டும், முக்கியமான நிபந்தனை யாரையாவது கொலை செய்தால் தான் வெளியே போக முடியும், இல்லை என்றால் அவரையே போட்டு தள்ளி விடுவார்கள். இது தான் அவர்கள் காண்ட்ராக்ட்.
* இந்த படத்தின் முதல் பாகம் முதல் ஒரு மணி நேரம் மற்றும் பல இடங்களில் “A” ரகம், தாறுமாறா ஆபாச காட்சிகள்.
* இந்த படத்துல (இரண்டு பாகத்திலும்) பல காட்சிகள் சும்மா தாறுமாறா இருக்கும், ஹாரர் பட ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் மற்றவர்களுக்கு சந்தேகம் தான். குறிப்பாக இரண்டு பாகத்திலும் க்ளைமாக்ஸ் காட்சிகள்.
* இதில் சிறைச்சாலை போன்று அமைக்கப்பட்டு இருக்கும் அறைகளில் ஒவ்வொருத்தரையும் கட்டி வைத்து இருப்பார்கள், இதனுடைய வடிவமைப்பு மிகவும் அச்சுறுத்தும் படி மிக இயல்பாக உண்மையான அறை போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
* இதில் துண்டான உடல்கள், ரத்தம் என்று அனைத்தும் உண்மை என்பது போலவே கிராபிக்ஸ் மற்றும் மேக் அப் ல் அசத்தி இருக்கிறார்கள், இவ்வளோ தத்ரூபமாக பார்த்தது இல்லை.


ஸ்லோவேகியா ல் இருக்கும் சிறுவர்கள் பெரும் குற்றவாளிகள் போல சித்தரித்துள்ளார்கள், ஒரு பாக்கெட் பப்பிள் கம் க்காக கொலை கூட செய்ய தயங்காதவர்கள், வேறு நாட்டை சேர்ந்தவர்கள் தனியாக இவர்களிடம் மாட்டினால் அவர்கள் கதி அதோ கதி தான். அதுவும் கடைசியில் இந்த சிறுவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு… ம்ஹீம் முடியல….
டார்ச்சர் அறையில் டார்ச்சர் செய்வதற்கென்றே பல உபகரணங்கள் வைத்து இருப்பார்கள் அதை பார்த்தாலே அங்கே இருப்பவர் பயத்திலேயே செத்து போய் விடுவார் அந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கும்.


அந்த மூவரில் ஒருத்தனை டார்ச்சர் அறைக்கு இழுத்துட்டு போவாங்க அப்போ வழியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருத்தரையும் விதம் விதமா டார்ச்சர் செய்துட்டு இருப்பாங்க..அதை பார்க்கும் போது குலை நடுங்கி விடும்..சத்தியமா பயந்து போய்ட்டேன்.
இதற்கும் Hostel என்ற பெயருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இவ்வாறு சிக்கி கொள்பவர்கள் பெரும்பாலும் “Hostel” என்ற ஹோட்டலில் தங்கி இருந்தவர்களே, அங்கே இதற்க்கு என்றே இருக்கும் பெண்கள் தங்கள் அழகில் இவர்களை மயக்கி பணத்திற்காக இந்த கும்பலிடம் சிக்க வைத்து விடுவார்கள். இதற்க்கு அங்கே இருக்கும் அனைவரும் உடந்தை.
படத்தில் வரும் ஒரு விசில் சத்தம் மரணபயத்தை கொடுக்கும், அதே போல அதில் வரும் ஒரு பாட்டு நன்றாக இருக்கும் எனக்கு ரொம்ப பிடித்தது (ஆங்கிலம் அல்ல வேறு மொழி)
இந்த சிறைச்சாலையில் உள்ள பாதுகாவலர்கள் உடன் இரு நாய்கள் இருக்கும், இதை போல ஒரு பயங்கரமான நாயையும் நான் பார்த்தது இல்லை.


பணம் நிறைய வைத்து எல்லாவற்றையும் அனுபவித்து, இவை எல்லாம் இல்லாமல் புதிதாக இதை போல முயற்சி செய்து பார்க்க நினைக்கும் சைக்கோக்களுக்கான கும்பல் தான் இது. பணத்தால் எதையும் செய்ய நினைப்பவர்களே இவர்கள்.
இந்த படத்தின் இயக்குனர் பெயர் Eli Roth.
இந்த படத்தை தயாரித்தது, படு பயங்கர ஹாரர் படங்களை தயாரித்து புகழ் பெற்ற Lion Gates நிறுவனமே.

இவை எல்லாவற்றையும் விட கொடுமையான விஷயம் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான்.
இத்தனையும் படித்த பிறகு படம் பார்க்க விரும்பினால் நீங்கள் உண்மையிலேயே ஹாரர் பட ஃபேன் தான்.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்தவர்களுக்கு என்னை போலவே பல அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன் . இரண்டு நாள் தூக்கம் வராமல் தவித்தவர்கள் கூட உண்டு.

Monday, July 19, 2010

The Dark Knight:விமர்சனம்




எல்லாரும் ஆகா, ஓகோ என்று பாராட்டிய படத்திற்கு போனால் பொதுவாக அது அவ்வளவு தூரம் எழுப்பமாக இருக்காது. அதையும் மீறி பிரமிக்க வைக்கிறது “The Dark Knight” (Batman பாகம் 2)!! “It’s too good to be true!” – நம்பமுடியாத அளவுக்கு வெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

முதலாவது பாகத்தைப் (Batman Begins) போலன்றி, கதையோட்டத்தில் நேரத்தை பெரிதாக செலவழிக்கவில்லை. எடுத்தவுடனேயே அடிதடி, உடைப்பு, நொருக்கு என்று போய்விட்டார்கள். ஒரு கொடூரமான, மனநோய்வாய்ப் பட்ட ஒரு கொலைகாரன்; ஏதோ ஒரு பழைய விபத்தினால் முகம் விகாரமடைந்து ஒரு கோமாளி (Joker) வடிவத்தில் உள்ளது. அதையே தனது முத்திரையாகக் கொண்டு Gotham நகரில் அட்டகாசம், அழிவு செய்துகொண்டிருக்கிறான். இந்த ஜோக்கருக்கும் batmanற்கும் இடையிலான போராட்டமே படத்தின் மூலக்கதை.


படத்தை முற்று முழுதாக batmanஇடமிருந்து அபகரித்து விடுகின்றார் ஜோக்கர்!! வாவ்!! என்னவொரு கதாபாத்திரம்!! முன்னைய batman படங்களில் ஜோக்கர் பாத்திரதை பெரிய பெரிய நடிகர்கள் ஏற்றிருந்தனர் (Jack Nicholson, Jim Carrey) – அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றார் புது ஜோக்கராக வரும் Heath Ledger. இயக்குணர், எழுத்தாசிரியர்களது பங்கும் இதில் நிறைய உண்டு என்றாலும், இந்தக் கதாபாத்திரத்தை தத்துரூபமாக வெளிக் கொண்டுவந்த பெருமை Heath Ledgerற்கே. முகபாவத்தில் மட்டுமன்றி, உடலிலின் ஒவ்வொரு அங்கத்தினாலும் ஜோக்கருக்கு உயிரூட்டியிருக்கிறார் இவர். திரையில் ஜோக்கர் வரும் நேரமெல்லாம் திக், திக் என்று உள்ளது; குலை நடுங்க வைக்கின்ற ஒரு நடிப்பு! ஆஸ்காரை கண்ணை மூடிக்கொண்டு கொடுத்து விடலாம்!!

ஒரேயொரு பாத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்படியொரு வெற்றிப்படத்தை தர முடியாது. படத்தின் மற்றைய அங்கங்களும் ஆணி அடித்தமாதிரி இருக்கின்றன. இயக்குணரிற்கும் ஆஸ்காரிற்கான ஒரு வாய்ப்பு உண்டு. ஒளியமைப்பாளர், இசையமைப்பாளர், சாகச இயக்குணர் என்று எல்லாருமே அவரவர் பணிகளை நச்சென்று செய்திருக்கிறார்கள். சிலகாட்சிகள் எப்படித்தான் அதை எடுத்தார்களோ என்று எண்ணி வியப்படையும் வண்ணம் உள்ளது. Batmanஇன் புதிய வாகனம் Batpod அந்தமாதிரி இருக்கிறது! இதுவொரு உண்மையான வாகனம் என்றோ, அதை ஒரு உண்மையான மனிதன் இயக்கியிருக்கிறார் என்பதையோ நம்பமுடியவில்லை!

.


படம் வட அமெரிக்காவில் சக்கை போடு போடுகின்றது. Batman Begins முழுதாக உழைத்த காசை இது ஒரு கிழமைக்குள் உழைத்துவிட்டதாம்!!படத்தின் பிரபல்யத்திற்கு ஒரு காரணம் ஜோக்கராக வந்த Heath Ledger படத்தை நடித்துகொடுத்து முடிந்த சில மாதத்தில் காலமடைந்ததுவிட்டமை. தற்செயலாக அளவுக்கதிகமாக மருந்து உட்கொண்டமைதான் (accidental overdose of prescribed medicine) இவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இது தற்கொலைனென்பது பலரின் அபிப்பிராயம். போதாக்குறைக்கு, ஜோக்கர் பாத்திரத்திற்கு தன்னை தயார்ப் படுதுவதற்காக சில கிழமைகள் விடுதி (hotel) அறையைப் பூட்டிவிட்டு உள்ளேயிருந்தாராம் என்று ஒரு செய்தி வேறு! என்ன காரண்த்திற்காக மக்கள் படத்திற்கு வந்தாலும் Heath Ledger அவர்களை மிகவும் திருப்த்திபடுத்தி அனுப்பிவைக்கின்றார் திரையிலிருந்து.


படத்தில் சரியாக இல்லாத விடயம் என்னவென்றால் கதையில் சில பகுதிகள் அல்லது சில சம்பவங்கள் logicஇல்லாது, நம்ப முடியாத விதமாக இருப்பது. என்றாலும் படம் விறுவிறுப்பாகப் போவதினால் அரங்கத்தில் இருக்கும் வரை இவை உங்கள் சிந்தனைக்கு எட்டப்போவதில்லை! படத்தில் 36 கொலைகள் இருக்கின்றாதாம். என்றாலும் இரத்தம் காட்டப்படவில்லை. எனவே மிகவும் சிறு குழந்தைகளைத் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்; பார்க்கலாம் என்ன, கட்டாயம் பாருங்கள்!!!

Batman Begins (2005) - விமர்சனம்






நீங்கள் ஒரு ஆக்சன் பட ரசிகர் என்றால் “Batman Begins” கட்டாயமாக பார்க்கவேண்டிய ஒரு படம். Batman பற்றி எல்லாருக்கும் தெரியும்; 1989-1997 காலப்பகுதியில் 4 batman திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இவவாறு இருக்கையில் இந்தப்படத்தில் என்ன விசேசம்?

முதலாவது கதையோட்டம்: “Batmag Begins”, batman வரிசைக்கு மீள் உயிர் (reboot என்று சொல்வார்கள்) தந்திருக்கிறது. மிகவும் ஆரம்பத்திலிருந்து Batman எவ்வாறு உருவாகிறார், அவரது குணம் என்ன, பலம் என்ன, பலவீனம் என்ன என்று Batmanஇன் ஒவ்வொரு பாகத்தையும் துல்லியமாகவும், புத்திசாலித்தனமாகவும், முக்கியமாக விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். Batmanஐ ஒரு காமிக் புத்தக superhero ஆக வடிவமைக்காமல், மிகவும் நம்பகத்தன்மையோடு காட்டியிருக்கிறார்கள்.


"Tumbler"
அடுத்தது கதாபாத்திரங்கள்: ஹாலிவூட்டின் பிரபல்யங்களையெல்லாம் நீங்கள் இதில் சந்திக்கலாம். எனினும் இவர்கள் பகட்டுக்காக வரவில்லை. படத்தில் வரும் அனைவருக்கும் ஆணித்த்ரமான கதாபாத்திரங்கள்; அதில் அவர்கள் தங்கள் திறமைகளைக் கொட்டியிருக்கிறார்கள். Margan Freeman ஒரு படத்திலிருந்தாலே அவருக்காகவே அந்தப் படத்தைப் பார்க்கலாம். தமிழில் நாகேஷ் அல்லது நாசர் போல…

கடைசியாகத் தொழில்நுட்பம்: Batmanஇன் ஒவ்வொரு அங்கங்களிற்கும் (உடை, செட்டை, காது, கத்தி) செயற்பாட்டிற்கும் (விஞ்ஞான) விளக்கம் தர முயற்சித்திருக்கிறார்கள். படத்தில் பலராலும் பேசப்பட்டது Batmobile – Batmanஇன் கார். “Tumbler” என்று செல்லப்பெயர் கொடுக்கப்பட்ட இது முன்னைய படங்களைப் போல ஒரு பொய்க்காரில்லை; இது ஒரு நிஜமாக வடிவமைக்கப்பட்ட, நிஜமாக தொழில்படுகின்ற ஒரு கார். இதன் வடிவமைப்பு விபரண்த்திற்து அப்பாற்பட்டது. படத்தின் கதைவசனத்திலிருந்து கடன் எடுப்போமானால்:
police officer talking to walki talkie: “at least tell me what it looks like” [batmobile whizzes past, and after staring at it] “Never mind”





“The Dark Knight” படத்தை பார்ப்பதற்கு நீங்கள் தயார்படுகிறீர்கள் என்றால், முதலில் “Batman Begins” ஐ பாருங்கள்.