Monday, June 28, 2010

SAW movie 1 to 6 part - 4 விமர்சனம்




Saw VI கிட்டத்தட்ட இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இதில் வரும் சில காட்சிகள்.. முதல் பதிவில் உள்ளது. மறந்திருப்பவர்கள் திரும்ப படித்துக் கொள்ளவும். அதற்கு முன் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால்...


01. ஜிக்ஸாவின் உடல் பிரேத பரிசோதனையின் போது, அவர் வயிற்றில் இருந்து கிடைக்கும் ஒரு டேப். அந்த டேப், மார்க் ஹாஃப்மேனுக்கானது. அமேண்டா உட்பட அத்தனை பேரையும், டெஸ்டிற்கு உட்படுத்திய ஜான், மார்க்கையும்... விடப் போவதில்லை என்று டேப் சொல்ல (Saw IV-ல் இந்த காட்சி வரும்),

02. ஜிக்ஸா இறந்த பின் அவரின் வக்கீல் மூலமாக, அவர் மனைவி ஜில் டக்-கிற்கு கிடைக்கும் ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள், மொத்தம் ஆறு கவர்கள். அதில் எப்பொழுதும் போல, கடத்த வேண்டிய ஆட்களின் விவரங்கள்.

இப்பொழுது ஜில் டக்-கும்... இந்த கடத்தல் வேலைகளுக்கு உடந்தை என தெரிய வரும்போது, மார்க் ஹாஃப்மேன்.. ஜில்-லிடம், ‘இந்த ஜிக்ஸா விளையாட்டில் தானே முழு கண்ட்ரோலையும் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், ஜிக்ஸாவின் பெட்டியில் கிடைத்த அந்த கவர்களை அவரிடன் கொடுத்து விடுமாறும்’.. சொல்ல... ஜில் அதிலிருந்து ஐந்து கவர்களை மட்டும் கொடுக்கிறார். அந்த ஐந்து கவர்களிலும் உள்ள ஆட்களை மார்க் கடத்துகிறார்.

இதுநாள் வரை, சிசிலை தவிர வேறு யாரையும், தன் பர்சனல் காரணங்களுக்காக கடத்தாத ஜிக்ஸா, தன்னுடைய இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO வில்லியம்-மையும், அவருக்குத் துணை போகும் அவரின் ஊழியர்களையும் டெஸ்ட் விக்டிமாக்குகிறார்.

இத்தனை நாட்களாக, யாருக்கு யார் ஆப்ரேஷன் செய்ய வேண்டும், இன்ஸூரன்ஸை அப்ரூவ்/ரிஜக்ட் செய்வதால்... யார் உயிரோடு இருக்கலாம்/வேண்டாம் என்பதை தீர்மானித்துக் கொண்டிருந்த வில்லியம், இப்பொழுது இந்த விளையாட்டில்.., தன் ஊழியர்களில்.. யார் உயிரோடு இருக்கலாம்/வேண்டாம் என்று தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு டெஸ்டாக நடந்து கொண்டிருக்க, 1-2 உயிர் பிழைக்கிறார்கள். ஆனால் கடைசி டெஸ்ட், இவருக்கானது. முதல் பதிவில்...

“இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO, வில்லியம், தாங்கள் சொல்லும் டாக்டர்தான் இவரின் ஆப்ரேஷனை செய்ய முடியுமே தவிர... இவரால் எந்த டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். கூடவே.. இன்னும் ஒருவரது இன்ஸூரன்ஸ க்ளெய்மையும் நிராகரித்து விடுகிறார். “

என வரும் பாராவின் கடைசி வரிகளில் இன்ஸூரன்ஸ் நிராகரிக்கப் பட்டவர் ஒரு வக்கீல். அதனால் மருத்துவச் சிகிச்சை மறுக்கப்பட்டு உயிரழந்த அவருடைய மனைவியும், மகனும் ஒரு ரூமிலும், வில்லியமின் தங்கை இன்னொரு ரூமிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.

இறுதி டெஸ்டில்... வக்கீலின் மனைவி-மகனுக்கு.... வில்லியம் உயிரோ இருப்பதா/வேண்டாமா எனத் தீர்மானிக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. வக்கீலின் மகன்... வில்லியத்தின் சாவை தீர்மானிக்க.........

இதே நேரத்தில்..., ஏஜெண்ட் ஸ்ட்ராமின் பழைய பார்ட்னர், படுகாயமடைந்த ஏஜெண்ட் பெரஸ்..., இன்னும் உயிரோடு இருப்பது, மார்க்-கிற்கு தெரிய வருகிறது. ஸ்ட்ராமின் கைரேகை அத்தனை இடங்களிலும் இருப்பதால்... எல்லோரும் அவரை சந்தேகித்திருக்க...,

... இந்த ரேகையில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், புதிதாக கிடைக்கும்.. ஜிக்ஸா கேசட்களில்.. கேட்கும் குரல்கள்.. பழைய ஜிக்ஸாவின் குரலோடு ஒத்துப் போகவில்லை எனவும்.. பெரஸ் புதிதாக குட்டையை குழப்புகிறார்.

ஒரு வழியாக.... அந்த கேசட் குரலை, தொழில்நுட்பங்களை உபயோகித்து..., அந்த குரலுக்குச் சொந்தக் காரர்.. மார்க் என.. இவர்கள் கண்டுபிடிக்கும் போது..., அவர்கள் எல்லோரயும்.. மார்க் மேலே அனுப்புகிறார்.

இதை முடித்துவிட்டு...CEO வில்லியம்-மின் விளையாட்டு நடக்கும் இடத்திற்கு வரும்போது... ‘தான் அமேண்டாவிற்கு எழுதிய மிரட்டல் கடிதம் அங்கேயிருப்பதை பார்க்கும் போது’, ஜில் டக்-கால்.. தாக்கப் படுகிறார். ஜிக்ஸாவின்.. ஆறாவது கவரில் இருந்தது மார்க் ஹாஃப்மேன்.

மார்க் ஹாஃப்மேனுக்கு, நாற்ப்பத்தைந்து செகண்டில் அவரது தாடையை கிழிப்பது போன்ற டூல் செட் செய்யப் பட..., ஜில்... அங்கிருந்து வெளியேறுகிறார். ஆனால்.. 45 செகண்டிற்குள் அந்த டெஸ்ட் முடியும் முன்பே, பாதி வாய் கிழிந்த நிலையில்... மார்க் ஹாஃப்மேன் தப்பிக்கிறார்.

------ The End -----
only upto Saw 6.so lets wait to see SAW 7.. :)

Thanks to hollywood bala

SAW movie 1 to 6 part - 3 விமர்சனம்



மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின், [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை உருவாக்கியிருப்பாள். ஆலிஸன் பூட்டைத் திறந்தும், அவளின் உடல் பிய்த்தெறியப் படுகிறது.



ஆஃபீஸர் ரிக் (Rigg), எதிலும் கொஞ்சம் அவசரக் குடுக்கை. ஜிக்ஸாவின் விளையாட்டுக்கள் எங்கிருந்து எப்படித் தாக்கும் என்று தெரியாவிட்டாலும்... சில சமயம் எந்த பாதுகாப்பும் இல்லாமல்... சில கதவுகளை திறந்து கொண்டு உள்ளே போய்விடுவார். தன்னால் முடிந்த வரைக்கும்... அத்தனை உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்.

முதல் பாகத்தில் இறந்த ராப்பிச்சை, ச்சைனீஸ், ஆறு மாதங்களாக காணாமல் போன எரிக் மேத்திவ்ஸ், இப்பொழுது ஆலிஸன் என ஒவ்வொருவராக.. அவரைச் சுற்றியிருப்பவர்கள் இறக்க.., யாரையும் காப்பாற்ற முடியாத வருத்தத்தில் இருக்கும் போது, அவருக்கான டெஸ்ட் ஆரம்பிக்கிறது.

உருகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஐஸ் பாரில், இத்தனை நாட்களாக காணாமல் போன எரிக் மேத்தீவ்ஸ் ஒரு புறமும், மார்க் ஹாஃப்மேன் இன்னொரு புறமும் கட்டி வைக்கப் பட்டுள்ளனர். Saw II -ல் நடக்கும் கேமில் அமேண்டா பங்கெடுப்பது போல, இந்த டெஸ்டில் மார்க் ஹாஃப்மேன்.

இந்த டெஸ்டின் பகடைக் காய்கள்..... 01. ஒரு பிம்ப் 02. பெண்களை கட்டி வைத்து போர்னோ எடுக்கும் ஒருவன் 03. தன் மனைவி, குழந்தையை துன்புறுத்தும் ஒருவன் (கீழிருக்கும் படத்தில்) 04. அதை தட்டிக் கேட்காத மனைவி 04. இவர்களுக்காகவும், ஜிக்ஸாவின் மனைவி ஜில் டக்-கிறாகவும் வாதாடும் ஒரு வக்கீல் ஆர்ட் பேங்க் (இவருடைய வாய்தான் தைக்கப் பட்டிருக்கும். இன்னொரு கண்ணிமை தைக்கப் பட்ட ஒருவனோடு சண்டையிட்டு அவனை கொல்வார்).

இந்த வக்கீல் மட்டும், எரிக் மேத்திவ்ஸ் & மார்க் கட்டிப் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு வருகிறார். அவரின் டெஸ்ட், 90 நிமிடம் கழிந்தால் மட்டும்...., மார்க்கையும், எரிக்கையும் விடுதலை செய்யலாம். இல்லையெனில் அவரின் பின் கழுத்து ஓட்டை போடப் படும். 90 நிமிடத்திற்குள் கதவு திறக்கப் பட்டால், எரிக்கின் தலை சுக்கு நூறாகும்.

ரிக்கிற்கு மொத்தம் 90 நிமிடம் கொடுக்கப் படுகிறது. அதற்குள்.. எரிக் மேத்திவ்ஸை காப்பாற்ற வேண்டும். நடுவில் முடிந்தால் இவர்களை காப்பாற்றப் பார் என்பது மாதிரியான ஒரு கட்டளை.

ஆனால் டெஸ்டின் முக்கிய நோக்கம்... இவர்களை காப்பாற்றுவது அல்ல. வேடிக்கை பார்ப்பதும் அல்ல. இவர்கள் அனைவரும்... தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் முடிவு அவர்கள் கையில். ஆனால் ரிக்.. எல்லோரையும் காப்பாற்ற முயன்றும் முடியாமல் (அந்த போர்னோ பார்ட்டியை தவிர்த்து) வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை.

இதே நேரம்... இன்னும் இரண்டு FBI அதிகாரிகள் கேஸினுள் வருகிறார்கள். ஸ்டார்ம் & பெரஸ். ஜிக்ஸாவிற்கு இவர்கள் மீதும் குறி. ஒரு கட்டத்தில் பெரஸ் படுகாயமடைய, ஸ்டார்ம் மட்டும்... ரிக்கை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.

இப்பொழுது இருவரும் (ரிக் & ஸ்ட்ராம்) ஒரே கட்டிடத்திற்குள்!! ஸ்ட்ராம் வேறு எதுவோ சத்தம் கேட்டு இன்னொரு அறை பக்கமாக செல்ல...., அந்த சத்தம் போட்டது.... போனப் பதிவில், தன் மகனின் மரணத்துக்காக பழி வாங்கத் துடித்த ஜெஃப்.

அந்த நேரத்தில் ஜெஃப், அமேண்டாவையும், ஜானையும் கொன்றிருக்க, ஜானின் இதயத் துடிப்பு நின்றதால் டாக்டர் லின்னும் மரணமடைய, சரியா உள்ளே வரும் ஸ்ட்ராமை, ஜெஃப் சுட முயற்ச்சிக்கும் போது, ஸ்ட்ராம் ஜெஃபை கொல்கிறார்.

கட்டிடத்தின் இன்னொரு பகுதியில்... எந்த யோசனையும் இன்றி... கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வரப் பார்க்கும் ரிக்-கை எரிக் மேத்திவ்ஸ் சுட (90 நிமிடத்திற்குள் கதவு திறந்தால், இவர் தலை காலி), அப்படியும் உள்ளே வரும் ரிக், வக்கீலை சுட....,

எரிக்கின் தலை காலி + வக்கீலும் மீண்டும் ரிக்-கால் சுடப் படுகிறார். அதற்குப் பின்தான், டெஸ்டின் உண்மையான நோக்கம் புரிகிறது (இவரின் டெஸ்ட் சும்மாயிருப்பது. விளையாடுவது அல்ல). மார்க் ஹாஃப்மேன் மட்டும்... ரிக்-கை அங்கேயே விட்டுவிட்டு....

கட்டிடத்தின் இன்னொரு பகுதிக்குப் போய்..., FBI ஏஜெண்ட் ஸ்ட்ராம் இருக்கும் கதவை தாழிட்டுவிட்டு சென்று விடுகிறார். (இத்தோடு Saw IV ஓவர்). அங்கிருந்து ஏஜெண்ட் ஸ்ட்ராம்மின் கேம் ஆரம்பிக்கிறது.

அந்த அறையில் உள்ள ஒரு ரகசிய கதவின் மூலமாக இன்னொரு பகுதிக்குச் செல்லும் போது, மார்க் ஹாஃப்மேனால் (?) தாக்கப்பட்டு, தண்ணீர் நிரம்பும் ஒரு கண்ணாடிக் பெட்டிக்குள் மாட்ட வைக்கப் படுகிறார்.

ஆனாலும்.. தன் தொண்டையையில் ஓட்டை போட்டு தப்பிக்க, மார்க் ஹாஃப்மேனுக்கு இப்பொழுது, இவரால்/இதனால் பிரச்சனை!! ஆனாலும்... ஜிக்ஸா இறப்பதற்கு முன், தன்னிடம் கடைசியாக கொடுத்த ஒரு லிஸ்டில் உள்ள சிலரை கடத்துகிறார்.

அதிலுள்ள எல்லோரும்... ஒரு கட்டிடம் எரிக்கப் பட்டு, அதனால்.. எட்டு பேர் பலியான ஒரு சம்பவத்தில் தொடர்புடையவர்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்கள்.

இவர்களுக்கான டெஸ்டின் முக்கிய குறிக்கோள், இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து.. அத்தனை ட்ராப்பையும் உடைக்க வேண்டும். ஆனால்.. ஒவ்வொரு ட்ராப்பிலும், ஒவ்வொருவராக கொல்லப் பட, கடைசியா இரண்டு பேர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர் (இதை இன்னும் சொல்லலை. ஒரு யூகம்).

இந்த டெஸ்ட் நடக்கும் போது....., மார்க் ஹாஃப்மேன் மீது சந்தேகம் கொள்ளும் ஏஜண்ட் ஸ்ட்ராம்... மார்க்கின் பழைய ரெக்கார்டுகளை சோதிக்கும் போது, மார்க்கின் சகோதரி மரணம், அதற்கான பழிவாங்கல் கொலை (முதல் பதிவு) எல்லாம் தெரிய வருகிறது.

ஆனால் இதே சமயம்.. அவருக்கே தெரியாமல்... அவர்தான் குற்றவாளி என்பது போல, ஸ்ட்ராமின் உயர் அதிகாரி நம்ப வைக்கப் படுகிறார். அதற்கு போலி சாட்சியாக, ஸ்ட்ராமின் செல்ஃபோன் பயன்படுகிறது.

மார்க்கைத் தேடி ஸ்ட்ராம் அந்த கட்டிடத்திற்கு வரும்போது... ஸ்ட்ராம் கொல்லப் பட, மார்க் வெளியே வருகிறார். ஆனால் ஜிக்ஸா அவரையும் விட்டு வைப்பதாக இல்லை.

(Contiue 3)

thanks to HOllywood bala

SAW movie 1 to 6 part - 2 விமர்சனம்



டெஸ்டில் இருந்து தப்பித்தால்.. அவர்களை உயிருடன் விடுவது ஜானின் கொள்கை என்றால், சிஷ்யை அமேண்டாவிற்கோ... தப்பிப்பவர்களையும் கொலை செய்துவிடுவது வழக்கம். ஏற்கனவே, டெஸ்டில் தப்பித்த போட்டோக்ராஃபரை கருணைக் கொலை செய்திருக்கிறாள். இப்பொழுது அடுத்தடுத்த டெஸ்ட்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன.

ஸிக்-ஸா கேசில் புதிதாக ஒரு டிடக்டிவ் உள்ளே வருகிறார். பெயர் எரிக் மேத்யூவ்ஸ். டிடக்டிவ் எரிக் மேத்யுவ்ஸ் தன் மகன் டேனியலை, அவ்வப்போது அவன் செய்யும் தவறுகளுக்கு.. எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கிறார். ஆனால்.. மற்ற சிலருக்கு அவரே தடயங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருகிறார் (எல்லோரும் போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் அல்லது போதைப் பொருளை விற்பவர்கள்).

இப்படி எரிக் மேத்யுவ்ஸால் பாதிக்கப் பட்ட சிலர், எரிக்கின் மகன் டேனியலோடு கடத்தப் படுகிறார்கள். கடத்துவது போஸீஸ்காரர் மார்க்கும், அமெண்டாவும். ஒரு கட்டிடத்திற்குள், கடத்தப் பட்டவர்கள் அடைக்கப் படுகிறார்கள். இதில் அமேண்டாவும் யாருக்கும் தெரியாமல் பங்கெடுக்கிறாள் (டேனியலை காப்பாற்றுவதற்க்காக?). டேனியலுக்கு தான் யாரென வெளியே சொன்னால், அவர்களால் நிச்சயம் அவனுக்கு ஆபத்து.

அந்த கட்டிடம் முழுவதும்.. மெலிதாக விஷவாயு கசிந்து கொண்டிருக்க, அதிலிருந்து தப்பிக்க வேண்டுபவர்கள், ஒவ்வொரு டெஸ்டிலும் பாஸானால்... முறிவு மருந்து கிடைக்கும். ஆனால்... எந்த திட்டமும் இல்லாமல் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பிக்கின்றனர். நடுவில் இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல் போக, அவர்களே அடித்துக் கொண்டு சாக ஆரம்பிக்க....... கடைசியில் எஞ்சியிருப்பது அமேண்டாவும், டேனியலும் மட்டும்.

இந்த அத்தனை காட்சிகளும் வீடியோவாக எடுக்கப் பட்டு...... லைவ் ஃபீட் போல ஒரு கட்டிடத்திற்குள் ஒளிபரப்பப் படுகிறது. அதே கட்டிடத்தில்... ஜான் மிக மோசமான உடல்நிலையுடன்... ஆனால் எந்த கவலையும் இல்லாமல்... போஸீஸ் படையை எதிர்கொள்ள..., உள்ளே வருவது டிடக்டிவ் எரிக் மேத்யூவ்ஸும், டிடெக்டிவ் ரிக்-கும் (இந்தப் பெயரை நினைவு வைத்துக் கொள்ளவும். Saw IV இந்தப் பெயர் வரும்) .

வீடியோவில் தன் மகனையும், தன்னால் பாதிக்கப் பட்டவர்களையும் பார்க்கும் டிடக்டிவ் எரிக், டேனியலை காப்பாற்ற...., மற்ற போஸீஸ்களை ஏமாற்றிவிட்டு ஜானுடன் கிளம்பிப் போகிறார். அதே நேரத்தில்... இந்த வீடியோ.. லைவ் அல்ல.. என போஸீஸ் கண்டுபிடிக்கும் போது......, ஒரு லாக்கர் திறக்கப் பட.. அதனுள் டேனியல்.

இது எதுவும் தெரியாமல்.... எரிக் மேத்யூவ்ஸ்.. ஜானுடன் ஒரு கட்டிடத்திற்கு செல்ல... அங்கு எரிக் அடைக்கப் பட்டு, அவருக்கான... டெஸ்ட் துவங்குகிறது. எரிக்... தன்னுடைய காலை.... கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, எஞ்சியதை உடைத்துக் கொண்டு சங்கிலியில் இருந்து விடுபட்டாலும்.., எதிரில் வரும் அமேண்டாவோடு நடக்கும் சண்டையில் திரும்பவும் மயக்கமாக....., முகமூடியணிந்த ஒரு உருவம்.. எரிக்கை சிறையில் வைத்து... பாதுகாத்து வருகிறது.

இங்கிருந்துதான் Saw III & IV இரண்டும் தொடங்குகின்றன. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் குழப்பமில்லாத வரிசையான நிகழ்ச்சிகள் + கொலைகள். எதை வேண்டுமானாலும் முதலில் பார்க்கலாம். வரிசைக்காக, முதலில் Saw III.

(இடது படத்தில் ஜெஃப்) ஒரு கார் ஆக்ஸிடெண்டில் தன் மகனை ஜெஃப் & லின் இழக்கிறார்கள். லின் ஒரு டாக்டர். இப்பொழுது இவர்களுக்கு இருப்பது ஒரே மகள் மட்டும். அமேண்டா மூலமாக, ஜான் மூவரையும் கடத்துகிறான். அவர்களின் மகள் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் ஜானால் மறைத்து வைக்கப் படுகிறாள் (இந்தக் குழந்தை Saw V -ல், மார்க் ஹாஃப்மேனால் காப்பற்றப் பட்டு போலீஸிடம் ஒப்படைக்கப் படுவதுபோல் காட்சி வரும்).

இந்த ஆக்ஸிடண்டிற்கு காரணமான கார் ஓட்டுனரின் உடம்பின் உறுப்புக்களை பார்ட்-பார்ட்டாக... முறுக்கி... நம் உடம்பு எந்த அளவிற்கு ஃப்ளெக்ஸிபில் என கண்டறியும்(?), ஜிக்ஸாவின் ஃபேவரிட் டூலை டெஸ்ட் செய்யும் விக்டிம் ரெடியாகிறான். கூடவே சாட்சி சொல்லாதப் பெண், குற்றவாளியை ஆறு மாத சிறை தண்டனையோடு தப்பிக்க விட்ட ஜட்ஜ் என எல்லோரும் கடத்தப்பட்டு ஒவ்வொரு விதமான முறையில் டெஸ்ட் டூலாக உபயோகப் படுகின்றனர். இந்த அத்தனை டெஸ்ட் டூல்களையும் டிஸைன் செய்தது அமேண்டா. இவையனைத்தும், குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்ற வகையில் மட்டுமே டிஸைன் செய்யப் பட்டவை.

டூல்களை தயார் செய்வது மார்க் ஹாஃப்மேன். இந்த நேரத்தில் மார்க்கிற்கும், அமேண்டாவிற்கும் ஈகோ பிரச்சனை வருகிறது. இதனால் அமேண்டாவை கழற்றி விடப் பார்க்கும் மார்க்....,

ஜில் டக்-கின் (ஜானின் மனைவி) கருக் கலைப்பிற்கு, மறைமுகக் காரணம் அமேண்டாதான் என்ற உண்மையை.. (முதல் பதிவு) ஜானிடம் சொல்லப் போவதாகவும், அது வேண்டாமென்றால்... அவள் டாக்டர் லின்னை... ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தவுடன் கொல்ல வேண்டும் என ப்ளாக்மெய்ல் செய்யகிறான்.

டாக்டர் லின்... ஜானின்.. கேன்ஸருக்கு... ஆப்ரேஷன் செய்ய கட்டாயப் படுத்தப் படுகிறாள். ஜானின் இதயத் துடிப்பு நின்றாலோ, அல்லது ஜானை விட்டு தூரமாக சென்றாலோ, அவள் தலையில் சில துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்குமாறு ஒரு டூல் செட்டப் செய்யப் படுகிறது.

அதே நேரத்தில் டாக்டர் லின்னின் கணவன் ஜெஃப், அதே கட்டிடத்தின் வேறொரு பகுதியில், தன் மகனின் மரணத்திற்கு காரணமானவர்களின் விதியை தீர்மானிக்கும் டெஸ்டில் பங்கேற்கத் துவங்குகிறான். இதன் தப்ப முடியாத டிஸைனால், அத்தனை பேரும் இறக்கிறார்கள் (ஜட்ஜ் காப்பாற்றப் பட்டாலும், இன்னொரு டூலினால் இறந்து விடுவார்).

டாக்டர் லின் இந்த நேரத்தில், ஜானின் ஆப்ரேஷனை முடித்திருந்தாலும், அமேண்டா அவளை கொல்ல முயற்சிக்கிறாள்...., அது அமேண்டாவுக்கு வைக்கப் பட்ட டெஸ்ட் என்பது தெரியாமல்!!! அமேண்டாவுக்கு, ஜெஃப்தான் டாக்டர் லின்னின் கணவன் என்று தெரியாது.

அதே நேரத்தில் அந்த அறைக்குள் வரும் ஜெஃப், அமேண்டாவை கொல்ல, ஜான் எவ்வளவு சொல்லியும்... ஜானையும் கொல்கிறான். ஜானின் இதயத் துடிப்பு நிற்கும் போது, லாக் விடுபட.. டாக்டர் லின்னும் இறக்கிறாள்.

நடந்தது என்னவென்றே தெரியாமல் ஜெஃப் முழிக்க..., இந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதியில்... வேறொரு டெஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது.

(continue)

Thanks to HOllywoodbala

SAW movie 1 to 6 part - 1 விமர்சனம்



Saw-வின் ஆறாம் பாகம் போன மாதம் வெளி வந்ததும், பதிவை போடுவதற்குள், விஜய் மத்த ஐந்து பாகங்களையும் ‘சுருக்கமாக’வாவது எழுதிட்டு... ஆறை எழுதச் சொன்னார். ’சுருக்கமா’ என்னை எழுதச் சொல்லுறாரே-ன்னு ரொம்ப.. நாளா யோசிச்சி.. எப்படி எழுதறதுன்னு குழம்பிக்கிட்டே இருந்தேன்.

ஐந்து பாகங்களையும் சுருக்கமா ஒரே பதிவில் சொல்ல முடியுமான்னு தெரியலை. அதனால் ஆறு படங்களையும் சேர்த்து.. ஒரே கதையாக சொல்ல முடியுமா எனப் பார்க்கிறேன். நிறைய கேரக்டர்கள் பெயர் வரலாம். முடிந்த வரைக்கும் நினைவு வைத்துக் கொள்ளவும்.

எச்சரிக்கை: இதில் எந்த பாகத்தையாவது நீங்கள் பார்க்கவில்லை என்றால், படிக்க வேண்டாம். அது ஆறாவது பாகத்தையும் சேர்த்துதான். ஆனால்.. ஆறாவது பாகம் பெரிய ரேஞ்சில் எந்த சஸ்பென்ஸையும் வைத்திருக்க வில்லை. முதல் ஐந்து பாகங்களில் விடை தெரியாத சில கேள்விகளுக்கு, ‘சப்பை கட்டு’ கட்டவே இந்த பாகம் எடுக்கப் பட்டிருக்கிறது.

அதனால்.. படித்தாலும்.. ஒன்றும் பிரச்சனையில்லை-ன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும்.. உங்க இஷ்டம்!!!


ஜேம்ஸ் வான் என்ற ஒரு ஆஸ்த்ரேலிய இயக்குனரால், ஒரு குறும் படமாக ஆரம்பித்த Saw, இன்று ஹாரர் சரித்திரம். Saw படமில்லாமல், இன்று ஹாலோவீன் இல்லை. Saw -வின் முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றி (21 நாளில் எடுக்கப்பட்டது), லயன்கேட்ஸ் நிறுவனத்திற்கு பணங்காய்ச்சி மரமாய் தெரிய, எங்கெல்லாம்.. கதையை நுழைக்க முடியுமோ.. அதையெல்லாம் செய்து... குழப்பிக் கொண்டிருப்பதால்... முதல் பாகத்தில் இருந்து ஆறாம் பாகம் வரை கதை... முன் பின் நகரும்.

அதனால் பட வரிசையில் கதையை பார்க்க முடியாது. முடிந்த வரைக்கும் க்ரொனலாஜிகலாக சொல்ல முயற்சிக்கிறேன். தப்பிருந்தால்... திருத்தவும்.

ஜான் க்ரேமர் ஒரு என்ஜினியர். அவர் மனைவி ஜில் டக், நர்ஸ் (சரி பார்த்து இதை திருத்தி விடுகிறேன்). போதைப் பழக்கத்தில் இருந்து திருத்தும் க்ளினிக் ஒன்றை நடத்தி வருகிறாள். சிசில் என்ற ஒரு போதைப் பழக்க நோயாளியால், ஜில்-லின் கர்பம் கலைந்து விடுகிறது. சிசில் தப்பி விடுகிறான். (ஜில்-லின் கருக் கலைப்பு கசமுசாவில் ‘அமேண்டா’ என்பவளுக்கு தெரிந்தோ-தெரியாமலோ தொடர்பிருக்கிறது). இந்த கருக் கலைப்பு விவகாரத்தால், விரக்தியில் மனைவி ஜில்லை விட்டு..., ஜான் பிரிந்து விடுகிறார்.

ஜானுக்கு, கேன்ஸர் இருப்பது, டாக்டர் கார்டன் என்பவரால் கண்டு பிடிக்கப் படுகிறது. தன் கேன்ஸரை குணப் படுத்துவதற்க்காக தானே ஒரு டாக்டரை ஜான் கண்டு பிடிக்கிறார். ஆனால் அவரின் இன்ஸூரன்ஸ் கம்பெனியின் CEO, வில்லியம், தாங்கள் சொல்லும் டாக்டர்தான் இவரின் ஆப்ரேஷனை செய்ய முடியுமே தவிர... இவரால் எந்த டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறார். கூடவே.. இன்னும் ஒருவரது இன்ஸூரன்ஸ க்ளெய்மையும் நிராகரித்து விடுகிறார்.

(இடது புகைப் படத்தில் ஜில்) உயிர் வாழ விரும்பாத ஜான், தானே காரை விபத்துக்குள்ளாக்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். எமனுக்குப் பதிலாக ஞான உதயம் வருகிறது. அன்றிலிருந்து மற்றவர்களின் வாழ்க்கையை உற்று கவனிக்க ஆரம்பிக்கிறான்.

தவறு செய்பவன், தானே திருந்தினால் ஒழிய, வேறு யாராலும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வருகிறான். உயிரின் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை எனவும் அதை புரிய வைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கிறான். யாரையும் கொல்லும் நோக்கம் ஜானுக்கு கிடையாது. பதிலாக, தான் வைக்கும் டெஸ்டில்.. பங்கேற்பவர்களே, தங்களை துன்புறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். தப்பித்தால், செய்த தவறுகளை நினைத்து, இனி திருந்தி வாழ ஒரு கடைசி வாய்ப்பு.

ஜான், தன் பிறக்காத குழந்தையின் மரணத்திற்கு காரணமான சிசிலை, தன் முதல் டெஸ்ட் சப்ஜக்டாக தேர்ந்தெடுக்க, சிசிலின் கைகள் ஒரு நாற்காலியில் பிளேடோடு கோர்க்கப் பட்டு, முகத்திற்கு நேராக உள்ள கூரிய பிளேடுகளை, முகத்தாலே அழுத்தி, கைகளின் லாக்கை திறக்க வேண்டிய கட்டாயம். டெஸ்டில் பாஸாகியும், தானாகவே ஒரு முள் கம்பியில் விழுந்து சிசில் இறக்கிறான். (ஜான் இங்கிருந்து தன் டெஸ்ட்களை தொடர ஆரம்பிக்கிறான்).

மாட்டுபவர்களுக்கு, புதிர் வடிவில் தனது டெஸ்ட் டூல்களை வடிமைப்பதாலும், இறந்தவர்களின் உடலிலிருந்து, தோலை ஜிக்ஸா வடிவத்தில் வெட்டி எடுப்பதால், ஜானுக்கு, ஜிக்ஸா கில்லர் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது.

அமேண்டா போதைப் பழக்கத்திற்கு அடிமையானவள். அவளை ஜான் கடத்த..., அவளின் டெஸ்ட்... உயிரோடு இருக்கும் ஒருவனின் வயிற்றை கிழித்து, உள்ளிருக்கும் சாவியை எடுத்தால், அவள் வாய்(?) தப்பிக்கும்.

ஜானின் டெஸ்டில் எல்லோரும் உயிர் விட, முதல் ஆளாய் அமேண்டா உயிர் பிழைக்கிறாள்.

ஜானின் இந்த ‘திருத்தும் முயற்சி’ பிடித்துப் போக, அமேண்டா, ஜானிடம் சிஷ்யையாகிறாள்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்..................................

தன் சகோதரியை, கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, வெறும் ஐந்து வருட சிறை தண்டனையோடு வெளியே வந்துவிடும் ஒருவனை (ஸெத் பேக்ஸ்டர்- இடது படத்தில்) , மார்க் ஹாஃப்மேன் (அடுத்தப் படத்தில்) என்னும் போலீஸ் டிடக்டிவ், ஜிக்ஸா -வின் டெஸ்ட் போல ஒன்றை உருவாக்கி, சகோதரியின் கொலைக்கு பழி வாங்குகிறான். அப்பொழுதிலிருந்து “I know who you are” என்று எழுதப் பட்ட கார்ட் அவன் அறையில் கிடைக்க ஆரம்பிக்கிறது.



ஒரு கட்டத்தில் அதை எழுதி வைப்பது ஜான் என நமக்குத் தெரிய வரும்போது, அவன் ஜானால் கடத்தப் படுகிறான். ஜான்.., மார்க்கிடம் - தனக்கு உதவியாளனாய் சேருமாறு ப்ளாக் மெய்ல் செய்ய, மார்க் ஒப்புக் கொள்கிறான்.

மார்க்கும் - ஜானும் சேர்ந்து, ‘தன் கையை தானே அறுத்துக் கொண்டு மற்றவர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சிக்கும் ஒருவனை கடத்துகிறார்கள்.

ஒரு கூண்டுக்குள், முள்கம்பிகளை அமைத்து, ஒரு பக்கத்தில் இருந்து... கதவு இருக்கும் இன்னொரு பக்கத்திற்கு போவதாக டெஸ்ட் டூல் அமைக்கிறார்கள். கிட்டத்தட்ட கூண்டின் கதவை அடைந்துவிட்டாலும்... அவன் உயிர் விடுகிறான். அந்த இடத்தில் ஜான், தன் டாக்டர் கார்டனின் பேனா டார்ச்லைட்டை தடயமாக வைத்துவிட்டுப் போகிறார்.

2012 - படத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரே ஒரு ராப்பிச்சை: அவரும், இன்னொரு சைனீஷ் பார்ட்னரும்... இந்த கூண்டில் இறந்தவனின் கேஸை கவனிக்க வருகிறார்கள். அப்பொழுது டாக்டர் கார்டனின் டார்ச்லைட் கிடைக்கிறது. இதை வைத்து டாக்டர்தான் ஜிக்ஸாவோ என்ற எண்ணம்... ராப்பிச்சைக்கு வருகிறது. டாக்டர் விசாரணைக்கு அழைக்கப் படுகிறார்.

அதற்கு அடுத்த அறையில் அமேண்டா... தான் எவ்வாறு ‘டெஸ்ட்’ செய்யப்பட்டாள் என போலீஸிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

ராப்பிச்சையும், சைனீஸும்... வீடியோவில் கேட்கும் ஃபயர் அலாரத்தை வைத்து, ஜிக்ஸாவின் இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். பிடிக்கப் போகும் நேரத்தில், ராப்பிச்சையின் கழுத்து அறுபட, சைனீஸ் புத்தரை மீட் பண்ண.. மேலோகம் போகிறார்.

அன்றிலிருந்து ராப்பிச்சைக்கு.. ஜிக்ஸா மேல் அலாதி பிரியம் வந்து..., துரத்த ஆரம்பிக்கிறார். ஆனால்.. தவறுதலாக... அந்த ஜிக்ஸா டாக்டர் கார்டன் என நினைத்து, அவரைப் பின் தொடர ஒரு போட்டோக்ராஃபரை ஏற்பாடு செய்கிறார்.

டாக்டர் கார்டனையும், போட்டோக்ராஃபரையும், அமேண்டா கடத்துகிறாள். அவர்கள் இருவரும், தனித்தனி சங்கிலிகளால் கட்டப்பட..., இந்த டெஸ்டில், நடுவில் பிணமாக ஜான் பங்கெடுக்கிறார்.

அதே நேரத்தில் ஸெப் என்பவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுக்கப்பட்டு, அதன் முறிவு மருந்திற்காக டாக்டர் கார்டனின் மனைவி-குழந்தையை அவர்கள் வீட்டிலேயே சிறை வைக்க பணிக்கப் படுகிறான்.

டெஸ்டின் முடிவில் டாக்டர் தன் காலை அறுத்துக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளியேற, ஸெப்பால்... சுடப்பட்ட போட்டோகிராஃபர் குற்றுயிராக அந்த அறைக்குள்ளேயே அடைக்கப் படுகிறான். சண்டையில் ஸெப் காலி.
தன் காலை அறுத்துக் கொண்டு வெளியேறிய டாக்டரின் நிலைமையும் இதுவரை வெளிப்படையாக எந்தப் படத்திலும் சொல்லப் படவில்லை (ஒரு இண்டர்வ்யூவில்..., இனிமேல் வரும் பாகங்களில் தெரியலாம் என சொல்லியிருக்கிறார்கள்).
அமேண்டாவால், போட்டோகிராஃபர் ஆடம் (இந்த ஒல்லிபிச்சான் தான்... முதல் மூன்று பாகங்களின் கதை-திரைக்கதை ஆசிரியர், எல்லா பாகங்களுக்கும் எக்ஸாக்யுட்டீவ் ப்ரொடியூஸர்) (கருணைக்) கொலை செய்யப் படுகிறான். இதில் அமேண்டா ரொம்ப உணர்ச்சி வசப்படுபவள் எனத் தெரிகிறது.

ஜானின் நோக்கம், டெஸ்டில் வெற்றியடைபவர்களுக்கு, உயிர் வாழ வாய்ப்பளிப்பது. ஆனால் அமேண்டாவின் நோக்கம் அதுவல்ல.

(தொடரும்) in part 2
thanks to HOllywood bala :)

Sunday, June 27, 2010

Cricket Fun
























Wednesday, June 23, 2010

Alice in Wonderland - அற்புத உலகில் ஆலிஸ்





சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது.

தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது விரும்பினாலும் அதிலிருந்து நீ விழித்தெழுந்திட முடியும் என்று அவளிற்கு தைரியம் தருகிறார்.

காலம் ஓடிச் செல்கிறது. ஆலிஸின் தந்தை மரணத்தை அணைத்துக் கொண்டு விடுகிறார். ஆலிஸ் வளர்ந்து அழகு செழிக்கும் இளம் பெண்ணாக மிளிர்கிறாள். கட்டுப்பாடுகளிற்குள்ளும், விக்டோரிய கலாச்சாரத்திற்குள்ளும் இலகுவாக மடங்கிவிட மறுக்கும் தன்மை அவளில் இயல்பாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. தந்தையைப் போலவே அசாத்தியங்களை சாத்தியமாக்கும் விருப்பம் கொண்ட இளம் பெண் அவள்.

ஆலிஸின் தந்தையின் மரணத்தின் பின் ஆலிஸின் குடும்பத்தின் நிதி நிலை அவ்வளவு கவுரவமானதாக இல்லை. ஆலிஸின் தந்தையின் செல்வந்த நண்பனான ஒருவரின் மகனிற்கு ஆலிஸை நிச்சயம் செய்து வைக்க இரு வீட்டாரும் விருப்பமாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான நிகழ்விற்காக செல்வந்தர் வசிக்கும் மாளிகையின் அழகான தோட்டத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

வசதி படைத்த அந்தக் குடும்பத்தில் மருமகளாகச் செல்வதற்கு ஆலிஸிற்கு தயக்கம் இருக்கிறது. செல்வந்தரின் மகனின் குணாதிசயங்களும் ஆலிஸிற்கு திருப்தியளிப்பதாக இல்லை. இந்நிலையில் ஆலிஸின் சகோதரி, தம் குடும்ப நிலையை ஆலிஸிற்கு விளக்கி, அவளிற்கு ஆலோசனைகள் தந்து, திருமண நிச்சயதிற்கு உடன்படும்படியாகக் கேட்டுக் கொள்கிறாள்.

அழகான அந்த தோட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு மேடையொன்றில், செல்வந்தனின் மகனிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது தடுமாறும் ஆலிஸ், தான் சிறுமியாக இருந்தபோது கண்ட கனவில் தோன்றிய மேல் கோட் அணிந்த முயல், அந்தத் தோட்டத்தில் ஒரு செடிக்குப் பின்பாக நின்று தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். செல்வந்தனின் மகனை மேடையிலேயே காத்து நிற்க விட்டுவிட்டு மேல்கோட் அணிந்த முயலை தேடிச் செல்கிறாள் ஆலிஸ்.

மேல்கோட் அணிந்த அந்த முயலானது வெகு வேகமாக ஓடி ஒரு மரத்தின் அடியில் இருக்கும் குழியொன்றில் புகுந்து மறைந்து விடுகிறது. முயலைத் துரத்தி வந்த ஆலிஸும் தயங்காது அந்தக் குழிக்குள் இறங்கி விடுகிறாள். ஆனால் அந்தக் குழியோ சிறுவயதில் அவள் கனவில் வந்த குழிபோல் நீண்டு முடிவற்று செல்கிறது. சுழன்றபடியே அக்குழியில் விழுந்து கொண்டிருக்கும் ஆலிஸ் ஒரு கணத்தில் ஒரு அறைக்குள் சென்று விழுகிறாள்.

அந்த அறையில் அவள் கண்டெடுக்கும் ஒரு சாவியின் உதவியுடன், உடலை சிறிதாக மாற்றும் பானத்தைக் குடித்து தன் உடலை சிறிதாக்கி, அறையிலிருக்கும் சிறியதொரு கதவின் வழியாக கீழுலகிற்குள் [Underworld] பிரவேசிக்கிறாள் ஆலிஸ்.


கீழுலகம் தான் கனவில் கண்ட விந்தை உலகம் போலவே தோற்றமளிப்பதை வியப்புடன் பார்க்கிறாள் ஆலிஸ், விசித்திரமான உயிரினங்கள், விந்தையான தாவரங்கள் என அழகும், ரகசியமும் கலந்த ஒரு உலகம் அது. ஆலிஸ் தம் உலகிற்குள் நுழைந்ததை அறியும் சில விலங்குகள் ஆலிஸை நெருங்குகின்றன. இவ்விலங்குகளிற்கு பேசும் சக்தி வாய்க்கப் பெற்றிருக்கிறது.

ஆலிஸை நெருங்கிய விலங்குகள், ஆலிஸின் வளர்ச்சியையும், தோற்றத்தையும் பார்த்து இவள் முன்பொரு முறை இங்கு வந்த ஆலிஸா எனச் சந்தேகம் கொள்கின்றன. ஆலிஸிற்கும் இது குறித்து குழப்பம் உருவாகிறது. இதுவும் ஒரு கனவுதான் எனத் தன்னைத்தானே கிள்ளிப் பார்க்கும் ஆலிஸ், அந்த முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதை அறிந்து ஆச்சர்யம் கொள்கிறாள்.

ஆலிஸின் மேல் சந்தேகம் கொண்ட விலங்குகள் அவளை கீழுலகின் ஆருட சிகாமணி நீலக் கம்பளிப் பூச்சியிடம் உடனடியாக இட்டுச் செல்கின்றன. நீலக் கம்பளிப் பூச்சி ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் வெளி விடும் புகை அவரைச் சூழ ஒரு மாயத்தன்மையை உருவாக்குகிறது.ஆலிஸ் குறித்து நீலக் கம்பளிப் பூச்சியின் கணிப்பு புரியாத் தன்மை கொண்டதாக இருக்கிறது. கீழுலகின் விபரங்கள் அடங்கிய மந்திர நாட்காட்டிச் சுருள் ஒன்றைப் பார்த்தவாறே இவர்களின் விவாதம் தொடர்கிறது. மந்திர நாட்காட்டிச் சுருளில் ஆலிஸின் தோற்றத்தைக் கொண்ட பெண் ஒருத்தி, கீழுலகின் கொடுங்கோல் ராணியாகிய சிகப்பு ராணியின் செல்லப் பிராணியான கொடிய ட்ராகனைக் கொல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கீழுலகை தன் கொடுங்கோல் ஆட்சிக்குள் வைத்திருக்கும் சிகப்பு ராணியின் சீட்டுக் கட்டு வீரர்களாலும், சிகப்பு ராணியின் காதலனான குதிரை வீரனாலும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தாக்குதலில் சில விலங்குகள் சிறை பிடிக்கப்பட்டு சிகப்பு ராணியின் அரண்மனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் மந்திர நாட்காட்டி சுருளைக் கண்டெடுக்கும் குதிரை வீரன் கீழுலகிற்கு ஆலிஸ் வந்திருப்பதை ஊகித்து விடுகிறான்.

தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ளும் ஆலிஸ், கீழுலகில் பாதை தெரியாது தடுமாறுகிறாள். அப்போது அவள் முன்பாக தோன்றும், காற்றில் மறையும் சக்தி கொண்ட பூனை [Cheshire Cat] அவளை கிறுக்குத் தொப்பிக்காரன் [Mad Hatter] என்பவன் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்கிறது.

சிறை பிடித்த விலங்குகளுடன் சிகப்பு ராணியின் அரண்மனைக்கு திரும்பும் குதிரை வீரன், சிகப்பு ராணிக்கு ஆலிஸின் வருகையையும் அது அறிவிக்கும் அபாயங்களையும் விளக்குகிறான். ஆலிஸை உடனடியாகப் பிடித்து வரும் படி தன் பெரிய தலையை ஆட்டிய படியே உத்தரவு இடுகிறாள் ஆலிஸ். இது நிகழ்வதற்குள் சிகப்பு ராணியின் பழக் கேக்கை திருடித் தின்ற அடிமைத் தவளை ஒன்றுக்கு, சிகப்பு ராணியின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டு விட்டதை நண்பர்கள் அறிந்து கொள்வது நல்லது.

தன் இருப்பிடத்தில் ஆலிஸை வரவேற்கும் கிறுக்குத்தனமான சேஷ்டைகள் கொண்ட கிறுக்குத் தொப்பிக்காரன், இப்போது ஆலிஸாக வந்திருப்பது கீழுலகிற்கு முன்பு வந்த அதே ஆலிஸ்தான் என உறுதிப்படுத்துகிறான். அவளால்தான் சிகப்பு ராணியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறான். சிகப்பு ராணியின் சகோதரியான வெள்ளை ராணியிடமிருந்து கொடூரமான முறையில் சிகப்பு ராணி ஆட்சியைப் பறித்த சோகக் கதையை ஆலிஸிற்கு கூறுகிறான் கிறுக்குத் தொப்பிக்காரன்.

குறித்த ஒரு தினத்தில் சிகப்பு ராணியின் கொடிய ட்ராகனை ஆலிஸ் கொல்வாளெனில், வெள்ளை ராணியின் நல்லாட்சி மீண்டும் திரும்பும் என்பதை ஆலிஸிற்கு விளக்குகிறான் தொப்பிக்காரன். அந்தக் கொடிய ட்ராகனைக் கொல்வதற்கு ஒரு மந்திர வாள் தேவை எனவும், அந்த மந்திர வாள் தற்போது சிகப்பு ராணியின் மாளிகையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆலிஸிற்கு அறியத்தருகிறான் அவன்.

இந்த வேளையில் ஆலிஸைத் தேடி தேடுதல் வேடையில் இருக்கும் சிகப்பு ராணியின் வீரர்கள் இவர்களைச் சுற்றி வளைக்கிறார்கள், கிறுக்குத் தொப்பிக்காரன் ஆலிஸைக் காப்பாற்றுவதற்காக சீட்டுக் கட்டு வீரர்கள் பிடியில் தான் சிக்கிக் கொள்கிறான். ஆலிஸ் மறுபடியும் வீரர்கள் பிடியிலிருந்து தப்பிக் கொள்கிறாள். ஆனால் அவள் ஓய்ந்து விடவில்லை, சிகப்பு ராணியின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்ற சிகப்பு ராணியின் மாளிகையை நோக்கி விரைந்து செல்கிறாள் அவள்……



தொப்பிக்காரனையும், விலங்குகளையும் சிகப்பு ராணியின் பிடியிலிருந்து ஆலிஸ் மீட்டாளா? மந்திர வாளை அவள் கைப்பற்றினாளா? கொடிய ட்ராகனைக் கொன்று கீழுலகில் சிகப்பு ராணியின் ஆட்சிக்கு முடிவு கட்டினாளா? ஆலிஸிற்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தின் முடிவுதான் என்ன? என்பதை திரைப்படத்தினைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

“ உன்னைச் சுற்றியிருக்கும் கூட்டை உடைத்து உன் கனவுகளைப் தேடிப் பற ” எனும் கருத்தையே இயக்குனர் Tim Burton சிறப்பாக இயக்கியிருக்கும் Alice in Wonderland எனும் இத்திரைப்படம் கூற விழைகிறது. Lewis Carroll என்பவர் எழுதிய Alices Adventures in Wonderland, Through the Looking Glass ஆகிய இரு நாவல்களின் பாத்திரங்களை மையமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திரைக்கதை ஒன்றை, தனது வழமையான இருட் சுவை கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் டிம் பெர்டென்.

கீழுலகு எனப்படும் விந்தை உலகை மிகவும் அருமையான கற்பனையில் திரைப்படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என ஒவ்வொன்றின் உருவாக்கலிற்கும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்களின் உடையலங்காரங்கள், வண்ணத் தெரிவுகள், உள் மற்றும் வெளி அலங்காரங்கள் என்பன ரசனை மிகுந்த கற்பனையில் மிளிர்கின்றன.


கீழுலகம் கண்களிற்கு விருந்தளித்து உவகை தந்தாலும், டிம் பெர்டென் ரசிகர்களை நெருங்கி வருவது திரைப்படத்தின் ஆழமான பாத்திரப் படைப்புக்களாலேயே என்பதுதான் உண்மை. குறிப்பாக சிகப்பு ராணி, கிறுக்குத் தொப்பிக்காரன் ஆகிய பாத்திரங்களில் அவரது ஆழமான ஈடுபாடு தெளிவாகப் புலனாகிறது. இதேபோல் காற்றில் மறையும் செஷயர் பூனையும், செயின் ஸ்மோக்கர் நீலக் கம்பளிப் பூச்சியும், தன் குடும்பத்திற்காக சிகப்பு ராணிக்கு விலை போகும் நாயும் மனதை கவர்கின்றன.

சுதந்திரங்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் அதிகாரங்களையும், அந்த அதிகாரத்தை சுற்றி ஜால்ரா அடிக்கும் போலி வேடதாரிகளையும் எதிர்த்துப் போரடுபவளாக ஆலிஸ் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. கீழுலகில் தான் கற்றுக் கொண்ட இந்தப் போர்க்குணத்தை ஆலிஸ் மேல் உலகிலும் உபயோகித்து தன் வாழ்வை தன் விருப்பப்படி வாழும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்கிறாள். ஆலிஸ் வேடத்தில் புதுமுக நடிகையான Mia Wasikowska நடித்திருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ரசிகர்களை தன் பிடிக்குள் வீழ்த்த இவரால் முடியவில்லை என்பது தெளிவு.

ஆனால் ஆலிஸ் பாத்திரத்தை சுவையான கேக் போல் கபளீகரம் செய்து ஏப்பம் விடுகிறார்கள் சிகப்பு ராணியாக வரும் Helena Bonham-Carter, மற்றும் கிறுக்குத் தொப்பிக்காரன் வேடமேற்றிருக்கும் Johnny Depp ஆகியோர்.

பெரிய தலையும், அந்தத் தலைக்கேற்ற தலைக்கனமும் கொண்டு, வெட்டுங்களடா அவன் தலையை என்று கண்டபடிக்கு தண்டனைகளை அள்ளி வீசும் சிகப்பு ராணியாக ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது முகபாவங்களும், உடல் அசைவுகளும், சிறப்பான நடிப்பும் ரசிகர்களை மயங்கடிக்கிறது. அவரது உதடுகளில் இதய வடிவில் இருக்கும் உதட்டுச் சாயம் செம அழகு. முத்தம் தர மனசு அலைகிறது. தன் துணைவிக்கு அசரடிக்கும் பாத்திரத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார் டிம் பெர்டென்.

தன் மனதில் பொதிந்திருக்கும் ஒரு ஆழமான வேதனையுடன், எதிர்பாராத சமயங்களில் கிறுக்குப்பிடித்து ஆவேசமாகும் தொப்பிக்காரன் பாத்திரத்தில் ஜொனி டெப் பின்னிப் பிழிந்திருக்கிறார். சிகப்பு ராணியின் தலைக்கு தொப்பி செய்து தருவதாகக் கூறி ராணியை அவர் கவிழ்க்கும் பாணி அட்டகாசம். ஆலிஸிற்கும் அவரிற்குமிடையில் உருவாகும் பாசமான நட்பின் பிரிவு மூலம் ரசிகர் மனங்களை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர். ஆலிஸைப் பிரியும் வேளையில் டெப்பின் நடிப்பு உன்னதம். பரபரப்பான இறுதிச் சண்டைக் காட்சியின் பின்பாக டெப் ஆடும் அந்த நடனம் சூப்பரோ சூப்பர்.

விந்தை உலகம், சாகசம், நகைச்சுவை, ஆக்‌ஷன், மந்திரம் எனத் தொய்வில்லாது படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர், இருப்பினும் வெள்ளை ராணி வரும் காட்சிகளில் சலிப்பு சற்றுத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. இதனை ஆலிஸின் அற்புத உலகம் என்பதை விட டிம் பெர்டெனின் அற்புத உலகம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஒரு கூட்டுப் புழுவானது, தனது புது வாழ்விற்காக, அது அடைபட்டிருக்கும் கூட்டைக் கிழித்து, அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாறி காற்றில் பறந்து செல்வதைப் போலவே தன் கனவுகளை நோக்கிச் சுதந்திரமாக பறந்து செல்கிறாள் இந்த ஆலிஸ். அற்புத உலகில் ஆலிஸ், கேளிக்கைக்கு உத்தரவாதம்.