Friday, January 28, 2011

கார்ஸ் : விமர்சனம் (Cars)



கார்ஸ் :Pixar studio -வின் மற்றும் ஒரு அனிமேஷன் படம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நிறைந்திருக்கும் கார்கள் பற்றிய கார்டூன் படம்.கார்கள் பேசுகின்றன, பாடுகின்றன, ஆடுகின்றன, காதல் செய்கின்றன, கோபப்படுகின்றன, குதிக்கின்றன, அழுகின்றன. ஏன், ரோடு போடுகின்றன, கண்ணாமூச்சி விளையாடுகின்றன… இன்னும் எத்தனையோ..

வண்டுகள், பூச்சிகள் கூடச் சின்னச் சின்ன கார்கள் தான்..

அமெரிக்காவின் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் வாகனமான கார்கள், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பற்றித் தான் கதையே..



பிஸ்டன் கப் என்னும் பெருமைக்குரிய கோப்பையைப் பெறுவதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் ரேஸ்கார் தான் கதை நாயகன் Mc Queen. இந்தக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் கீழ்க்கோடியில் நடக்கிறது. அதிசயமாக இந்த முறை போட்டியில் மூன்று கார்கள் முன்னணியில் வந்துவிட யாருக்குக் கோப்பை என்னும் வழக்கைத் தீர்க்க ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஒரு போட்டி நாட்டின் மேல்கோடியில் இருக்கும் எல்லே(Elle) என்னும் ஊரில் வைப்பதாக முடிவு.

இந்த ஐந்து நாட்களுக்குள் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், தானே தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணம் என்று இறுமாந்திருக்கும் நாயக “கார”ன் எப்படி ஒரு சின்னஞ்சிறிய ஊரின் மக்களைப்(கார்களைப்) பார்த்து, புகழ் பணம் அதிகமில்லாத அவர்களின் அன்பைப் புரிந்து திருந்துகிறான் என்பதே கதை.



தமிழில் எத்தனையோ படங்கள் இது மாதிரி பார்த்திருக்கிறோம் என்றாலும் பழகிய கதையைப் புதிய பாத்திரங்கள், புதிய மொழியில் ஏற்றிப் பார்ப்பது இன்னோரு புது அனுபவம்.

ரேஸ் காரின் ஹாலிவுட் ஆக்டிங் காராக ஆவது போன்ற கற்பனைக் கோட்டைகள்; வயலில் தூங்கும் டிராக்டர்களை இந்தக் கார்கள் போய் குறும்புத்தனமாகக் குரலெழுப்பி, எழுப்பிவிடுவது; அந்த டிராக்டர்களுக்குப் பாதுகாவலனான ரோட்ரோலரைக் கண்டு பயந்து ஓடி வருவது; நெடுஞ்சாலையில் இருக்கும் மோட்டல்களைப் போன்ற கார்களுக்கான தங்குமிடங்கள்; முக்கியமாக, கதை நாயகியாக(Sally) வரும் கார் ஒரு நீர்வீழ்ச்சியின் அருகே மெல்ல மிதந்தபடி திரும்பும் போது, ஒரு காரின் முகத்தில் அந்தக் கண நேரக் காதலைக் காட்டியிருந்த விதம்; அதற்கு நம் நாயகன் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்ததையும் அழகாகக் காட்டியிருந்தது.. என்று வெறும் கார்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள்



படம் பார்த்துவிட்டு வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் “ஏன் கண், வாய் இல்லை?” என்று யோசிக்கத் தோன்றும். கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு நமக்கும் வரும்.

இது ஒரு மறுபதிவு நன்றி :http://pookri.com

No comments:

Post a Comment