Tuesday, January 31, 2012

‌கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?

கி‌ரி‌க்கெ‌ட்: மூத்த வீரர்கள் என்ன செய்ய போகிறார்கள்.?



ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, பேப்பரில் பலம் வாய்ந்த இந்திய அணி பாதாளத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், லஷ்மண் போன்றோர் தங்களது ஆட்டத்தின் மீது உண்மையான சந்தேகம் கொண்டு விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழிவிடுவதை பரிசீலிக்கவேண்டும்.இவர்களைக் கொண்டு 8 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக அயல்நாட்டு மண்ணில் மண்ணைக் கவ்வியது இந்திய அணி. இவர்கள் இல்லாமல் இன்னும் ஓரிரு தொடர்களை இழக்கட்டும்! பரவாயில்லை. குறைந்தது இந்த அளவுக்கு தேறும் இளம் வீரர்கள் யார் என்பதையாவது நாம் பார்த்து விடலாம்.

சீரியசாக சில விஷயங்களை யோசிப்பதை விடுத்து வீரர்கள் தங்கள் பழம்பெருமைகளைப் பேசி வருவதும், நாங்களும் இங்கே 2- 0 என்று ஜெயித்தோம் என்று பிதற்றி வருவதும் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்யாது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் 'ஒன்றுமே நடந்து விடவில்லை" இதே வீரர்கள்தான் நம்மை பெருமைக்கு இட்டுச்சென்றனர் என்றெல்லாம் கொம்பு சீவி விடுவதும் உறுதியாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை படுகுழியில் தள்ளும் முயற்சி.




சச்சின் 100, 100 என்று கனவு கண்டு இரண்டு மூன்று தொடர்களாக இந்திய அணியைச் சரியச் செய்துள்ளார். சேவாக் உடல் சமநிலை இல்லை. ஷாட் ஆடுவதற்கு முன்பும், பின்பும் அவரது பேலன்ஸ் சரியில்லை. ஹூக் , புல் ஷாட்களை ஆடாமல் நீண்ட நாட்களுக்கு ஓட்ட முடியாது, எனவே அவர் பின்னால் களமிறங்கவேண்டும், லஷ்மன் கிரீஸில் நின்ற படியே குப்பை கொட்டுகிறார். கம்பீரை அழைத்து ஒழுங்காக ஷாட் பிட்ச் பந்துகளை விளையாடும் வரை அணியில் இடமில்லை என்று கூறிவிடவேண்டும். தோனியை அழைத்து ஓய்வு பெற்ற மூத்த கேப்டன்கள் அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டவேண்டும். மேலும் கேப்டன் பேட்டிங் செய்வதும் அவசியம் என்பதையும் அவருக்கு அறிவுறுத்தவேண்டும்.




கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தார். ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்த தரத்திற்கு தான் தயார் என்பதை நிரூபித்துவிட்டார். அது போலத்தான் பிறரும், ஓரிரு டெஸ்ட் போட்டிகள் திணறல் இருக்கும் அதன் பிறகு அவர்கள் உருப்படியான வீரர்களாக மாறுவார்கள். அவர்களின் வழியை செங்கல் பெயர்ந்து விழுந்த குட்டிச் சுவர்களும், மகான் வீரர்களும் மறித்து வருவது நியாயமல்ல.

கிரிக்கெட் என்பது வெறும் பேட்டிங் மட்டுமல்ல. 40 வயது வரை ஒருவர் ரன் எடுக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் ஃபீல்டிங் என்று ஒன்று இருந்து வருகிறதே! அதற்கு நியாயம் செய்யுமா வயது? லஷ்மண் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுதும் முக்கியத் தருணங்களில் கேட்ச்களைக் கோட்டை விட்டு இஷாந்த், அஷ்வின் வயிற்றெரிச்ச்லைப் பெற்றார். டிராவிடின் கேட்சிங் திறமையும் போய்விட்டது. சச்சின் பாதுகாப்பாக டீப் திசையில் பீல்ட் செய்து வருகிறார். எனவே இவர்கள் தீவிரமாக வேறு பாதையை பற்றி யோசிப்பது நல்லது.



முதலில் இந்தத் தொடரில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு நேர்மையான விசாரணையும், அந்த விசாரணையின் முடிவை வெளிப்படையாக அறிவிப்பதும் நேர்மையாக அதற்கான திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தீர்வாக இருக்க முடியும்.இதனை விடுத்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு அயல்நாட்டுத் தொடர் இல்லை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதும், அடுத்த வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்தத் தோல்விகளை மறந்து விடுவார்கள் என்ற மனோநிலையையும் நிர்வாகமும் வீரர்களும் கொண்டிருந்தால் அது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மூடுவிழாவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிரவும்... நன்றி.. :)

2 comments:

  1. வை திஸ் கொலவெறி???

    ReplyDelete
  2. பின்ன என்ன சார்.. வேர்ல்ட் கப் வென்ற அணி மாற்றிய விளையாடுறாங்க.. எதோ ஆஸ்திரேலியா போனம சுத்தி பார்த்தோமா... அப்படி விளையாண்டா? அப்ப ஒரு fighting spirit இல்லாம சரண் அடைஞ்சா அப்புறம் எதுக்கு விளையாடனும்.

    ReplyDelete