Wednesday, June 23, 2010

Alice in Wonderland - அற்புத உலகில் ஆலிஸ்





சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது.

தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது விரும்பினாலும் அதிலிருந்து நீ விழித்தெழுந்திட முடியும் என்று அவளிற்கு தைரியம் தருகிறார்.

காலம் ஓடிச் செல்கிறது. ஆலிஸின் தந்தை மரணத்தை அணைத்துக் கொண்டு விடுகிறார். ஆலிஸ் வளர்ந்து அழகு செழிக்கும் இளம் பெண்ணாக மிளிர்கிறாள். கட்டுப்பாடுகளிற்குள்ளும், விக்டோரிய கலாச்சாரத்திற்குள்ளும் இலகுவாக மடங்கிவிட மறுக்கும் தன்மை அவளில் இயல்பாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. தந்தையைப் போலவே அசாத்தியங்களை சாத்தியமாக்கும் விருப்பம் கொண்ட இளம் பெண் அவள்.

ஆலிஸின் தந்தையின் மரணத்தின் பின் ஆலிஸின் குடும்பத்தின் நிதி நிலை அவ்வளவு கவுரவமானதாக இல்லை. ஆலிஸின் தந்தையின் செல்வந்த நண்பனான ஒருவரின் மகனிற்கு ஆலிஸை நிச்சயம் செய்து வைக்க இரு வீட்டாரும் விருப்பமாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான நிகழ்விற்காக செல்வந்தர் வசிக்கும் மாளிகையின் அழகான தோட்டத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

வசதி படைத்த அந்தக் குடும்பத்தில் மருமகளாகச் செல்வதற்கு ஆலிஸிற்கு தயக்கம் இருக்கிறது. செல்வந்தரின் மகனின் குணாதிசயங்களும் ஆலிஸிற்கு திருப்தியளிப்பதாக இல்லை. இந்நிலையில் ஆலிஸின் சகோதரி, தம் குடும்ப நிலையை ஆலிஸிற்கு விளக்கி, அவளிற்கு ஆலோசனைகள் தந்து, திருமண நிச்சயதிற்கு உடன்படும்படியாகக் கேட்டுக் கொள்கிறாள்.

அழகான அந்த தோட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு மேடையொன்றில், செல்வந்தனின் மகனிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது தடுமாறும் ஆலிஸ், தான் சிறுமியாக இருந்தபோது கண்ட கனவில் தோன்றிய மேல் கோட் அணிந்த முயல், அந்தத் தோட்டத்தில் ஒரு செடிக்குப் பின்பாக நின்று தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். செல்வந்தனின் மகனை மேடையிலேயே காத்து நிற்க விட்டுவிட்டு மேல்கோட் அணிந்த முயலை தேடிச் செல்கிறாள் ஆலிஸ்.

மேல்கோட் அணிந்த அந்த முயலானது வெகு வேகமாக ஓடி ஒரு மரத்தின் அடியில் இருக்கும் குழியொன்றில் புகுந்து மறைந்து விடுகிறது. முயலைத் துரத்தி வந்த ஆலிஸும் தயங்காது அந்தக் குழிக்குள் இறங்கி விடுகிறாள். ஆனால் அந்தக் குழியோ சிறுவயதில் அவள் கனவில் வந்த குழிபோல் நீண்டு முடிவற்று செல்கிறது. சுழன்றபடியே அக்குழியில் விழுந்து கொண்டிருக்கும் ஆலிஸ் ஒரு கணத்தில் ஒரு அறைக்குள் சென்று விழுகிறாள்.

அந்த அறையில் அவள் கண்டெடுக்கும் ஒரு சாவியின் உதவியுடன், உடலை சிறிதாக மாற்றும் பானத்தைக் குடித்து தன் உடலை சிறிதாக்கி, அறையிலிருக்கும் சிறியதொரு கதவின் வழியாக கீழுலகிற்குள் [Underworld] பிரவேசிக்கிறாள் ஆலிஸ்.


கீழுலகம் தான் கனவில் கண்ட விந்தை உலகம் போலவே தோற்றமளிப்பதை வியப்புடன் பார்க்கிறாள் ஆலிஸ், விசித்திரமான உயிரினங்கள், விந்தையான தாவரங்கள் என அழகும், ரகசியமும் கலந்த ஒரு உலகம் அது. ஆலிஸ் தம் உலகிற்குள் நுழைந்ததை அறியும் சில விலங்குகள் ஆலிஸை நெருங்குகின்றன. இவ்விலங்குகளிற்கு பேசும் சக்தி வாய்க்கப் பெற்றிருக்கிறது.

ஆலிஸை நெருங்கிய விலங்குகள், ஆலிஸின் வளர்ச்சியையும், தோற்றத்தையும் பார்த்து இவள் முன்பொரு முறை இங்கு வந்த ஆலிஸா எனச் சந்தேகம் கொள்கின்றன. ஆலிஸிற்கும் இது குறித்து குழப்பம் உருவாகிறது. இதுவும் ஒரு கனவுதான் எனத் தன்னைத்தானே கிள்ளிப் பார்க்கும் ஆலிஸ், அந்த முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதை அறிந்து ஆச்சர்யம் கொள்கிறாள்.

ஆலிஸின் மேல் சந்தேகம் கொண்ட விலங்குகள் அவளை கீழுலகின் ஆருட சிகாமணி நீலக் கம்பளிப் பூச்சியிடம் உடனடியாக இட்டுச் செல்கின்றன. நீலக் கம்பளிப் பூச்சி ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் வெளி விடும் புகை அவரைச் சூழ ஒரு மாயத்தன்மையை உருவாக்குகிறது.ஆலிஸ் குறித்து நீலக் கம்பளிப் பூச்சியின் கணிப்பு புரியாத் தன்மை கொண்டதாக இருக்கிறது. கீழுலகின் விபரங்கள் அடங்கிய மந்திர நாட்காட்டிச் சுருள் ஒன்றைப் பார்த்தவாறே இவர்களின் விவாதம் தொடர்கிறது. மந்திர நாட்காட்டிச் சுருளில் ஆலிஸின் தோற்றத்தைக் கொண்ட பெண் ஒருத்தி, கீழுலகின் கொடுங்கோல் ராணியாகிய சிகப்பு ராணியின் செல்லப் பிராணியான கொடிய ட்ராகனைக் கொல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கீழுலகை தன் கொடுங்கோல் ஆட்சிக்குள் வைத்திருக்கும் சிகப்பு ராணியின் சீட்டுக் கட்டு வீரர்களாலும், சிகப்பு ராணியின் காதலனான குதிரை வீரனாலும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தாக்குதலில் சில விலங்குகள் சிறை பிடிக்கப்பட்டு சிகப்பு ராணியின் அரண்மனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் மந்திர நாட்காட்டி சுருளைக் கண்டெடுக்கும் குதிரை வீரன் கீழுலகிற்கு ஆலிஸ் வந்திருப்பதை ஊகித்து விடுகிறான்.

தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ளும் ஆலிஸ், கீழுலகில் பாதை தெரியாது தடுமாறுகிறாள். அப்போது அவள் முன்பாக தோன்றும், காற்றில் மறையும் சக்தி கொண்ட பூனை [Cheshire Cat] அவளை கிறுக்குத் தொப்பிக்காரன் [Mad Hatter] என்பவன் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்கிறது.

சிறை பிடித்த விலங்குகளுடன் சிகப்பு ராணியின் அரண்மனைக்கு திரும்பும் குதிரை வீரன், சிகப்பு ராணிக்கு ஆலிஸின் வருகையையும் அது அறிவிக்கும் அபாயங்களையும் விளக்குகிறான். ஆலிஸை உடனடியாகப் பிடித்து வரும் படி தன் பெரிய தலையை ஆட்டிய படியே உத்தரவு இடுகிறாள் ஆலிஸ். இது நிகழ்வதற்குள் சிகப்பு ராணியின் பழக் கேக்கை திருடித் தின்ற அடிமைத் தவளை ஒன்றுக்கு, சிகப்பு ராணியின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டு விட்டதை நண்பர்கள் அறிந்து கொள்வது நல்லது.

தன் இருப்பிடத்தில் ஆலிஸை வரவேற்கும் கிறுக்குத்தனமான சேஷ்டைகள் கொண்ட கிறுக்குத் தொப்பிக்காரன், இப்போது ஆலிஸாக வந்திருப்பது கீழுலகிற்கு முன்பு வந்த அதே ஆலிஸ்தான் என உறுதிப்படுத்துகிறான். அவளால்தான் சிகப்பு ராணியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறான். சிகப்பு ராணியின் சகோதரியான வெள்ளை ராணியிடமிருந்து கொடூரமான முறையில் சிகப்பு ராணி ஆட்சியைப் பறித்த சோகக் கதையை ஆலிஸிற்கு கூறுகிறான் கிறுக்குத் தொப்பிக்காரன்.

குறித்த ஒரு தினத்தில் சிகப்பு ராணியின் கொடிய ட்ராகனை ஆலிஸ் கொல்வாளெனில், வெள்ளை ராணியின் நல்லாட்சி மீண்டும் திரும்பும் என்பதை ஆலிஸிற்கு விளக்குகிறான் தொப்பிக்காரன். அந்தக் கொடிய ட்ராகனைக் கொல்வதற்கு ஒரு மந்திர வாள் தேவை எனவும், அந்த மந்திர வாள் தற்போது சிகப்பு ராணியின் மாளிகையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆலிஸிற்கு அறியத்தருகிறான் அவன்.

இந்த வேளையில் ஆலிஸைத் தேடி தேடுதல் வேடையில் இருக்கும் சிகப்பு ராணியின் வீரர்கள் இவர்களைச் சுற்றி வளைக்கிறார்கள், கிறுக்குத் தொப்பிக்காரன் ஆலிஸைக் காப்பாற்றுவதற்காக சீட்டுக் கட்டு வீரர்கள் பிடியில் தான் சிக்கிக் கொள்கிறான். ஆலிஸ் மறுபடியும் வீரர்கள் பிடியிலிருந்து தப்பிக் கொள்கிறாள். ஆனால் அவள் ஓய்ந்து விடவில்லை, சிகப்பு ராணியின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்ற சிகப்பு ராணியின் மாளிகையை நோக்கி விரைந்து செல்கிறாள் அவள்……



தொப்பிக்காரனையும், விலங்குகளையும் சிகப்பு ராணியின் பிடியிலிருந்து ஆலிஸ் மீட்டாளா? மந்திர வாளை அவள் கைப்பற்றினாளா? கொடிய ட்ராகனைக் கொன்று கீழுலகில் சிகப்பு ராணியின் ஆட்சிக்கு முடிவு கட்டினாளா? ஆலிஸிற்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தின் முடிவுதான் என்ன? என்பதை திரைப்படத்தினைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

“ உன்னைச் சுற்றியிருக்கும் கூட்டை உடைத்து உன் கனவுகளைப் தேடிப் பற ” எனும் கருத்தையே இயக்குனர் Tim Burton சிறப்பாக இயக்கியிருக்கும் Alice in Wonderland எனும் இத்திரைப்படம் கூற விழைகிறது. Lewis Carroll என்பவர் எழுதிய Alices Adventures in Wonderland, Through the Looking Glass ஆகிய இரு நாவல்களின் பாத்திரங்களை மையமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திரைக்கதை ஒன்றை, தனது வழமையான இருட் சுவை கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் டிம் பெர்டென்.

கீழுலகு எனப்படும் விந்தை உலகை மிகவும் அருமையான கற்பனையில் திரைப்படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என ஒவ்வொன்றின் உருவாக்கலிற்கும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்களின் உடையலங்காரங்கள், வண்ணத் தெரிவுகள், உள் மற்றும் வெளி அலங்காரங்கள் என்பன ரசனை மிகுந்த கற்பனையில் மிளிர்கின்றன.


கீழுலகம் கண்களிற்கு விருந்தளித்து உவகை தந்தாலும், டிம் பெர்டென் ரசிகர்களை நெருங்கி வருவது திரைப்படத்தின் ஆழமான பாத்திரப் படைப்புக்களாலேயே என்பதுதான் உண்மை. குறிப்பாக சிகப்பு ராணி, கிறுக்குத் தொப்பிக்காரன் ஆகிய பாத்திரங்களில் அவரது ஆழமான ஈடுபாடு தெளிவாகப் புலனாகிறது. இதேபோல் காற்றில் மறையும் செஷயர் பூனையும், செயின் ஸ்மோக்கர் நீலக் கம்பளிப் பூச்சியும், தன் குடும்பத்திற்காக சிகப்பு ராணிக்கு விலை போகும் நாயும் மனதை கவர்கின்றன.

சுதந்திரங்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் அதிகாரங்களையும், அந்த அதிகாரத்தை சுற்றி ஜால்ரா அடிக்கும் போலி வேடதாரிகளையும் எதிர்த்துப் போரடுபவளாக ஆலிஸ் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. கீழுலகில் தான் கற்றுக் கொண்ட இந்தப் போர்க்குணத்தை ஆலிஸ் மேல் உலகிலும் உபயோகித்து தன் வாழ்வை தன் விருப்பப்படி வாழும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்கிறாள். ஆலிஸ் வேடத்தில் புதுமுக நடிகையான Mia Wasikowska நடித்திருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ரசிகர்களை தன் பிடிக்குள் வீழ்த்த இவரால் முடியவில்லை என்பது தெளிவு.

ஆனால் ஆலிஸ் பாத்திரத்தை சுவையான கேக் போல் கபளீகரம் செய்து ஏப்பம் விடுகிறார்கள் சிகப்பு ராணியாக வரும் Helena Bonham-Carter, மற்றும் கிறுக்குத் தொப்பிக்காரன் வேடமேற்றிருக்கும் Johnny Depp ஆகியோர்.

பெரிய தலையும், அந்தத் தலைக்கேற்ற தலைக்கனமும் கொண்டு, வெட்டுங்களடா அவன் தலையை என்று கண்டபடிக்கு தண்டனைகளை அள்ளி வீசும் சிகப்பு ராணியாக ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது முகபாவங்களும், உடல் அசைவுகளும், சிறப்பான நடிப்பும் ரசிகர்களை மயங்கடிக்கிறது. அவரது உதடுகளில் இதய வடிவில் இருக்கும் உதட்டுச் சாயம் செம அழகு. முத்தம் தர மனசு அலைகிறது. தன் துணைவிக்கு அசரடிக்கும் பாத்திரத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார் டிம் பெர்டென்.

தன் மனதில் பொதிந்திருக்கும் ஒரு ஆழமான வேதனையுடன், எதிர்பாராத சமயங்களில் கிறுக்குப்பிடித்து ஆவேசமாகும் தொப்பிக்காரன் பாத்திரத்தில் ஜொனி டெப் பின்னிப் பிழிந்திருக்கிறார். சிகப்பு ராணியின் தலைக்கு தொப்பி செய்து தருவதாகக் கூறி ராணியை அவர் கவிழ்க்கும் பாணி அட்டகாசம். ஆலிஸிற்கும் அவரிற்குமிடையில் உருவாகும் பாசமான நட்பின் பிரிவு மூலம் ரசிகர் மனங்களை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர். ஆலிஸைப் பிரியும் வேளையில் டெப்பின் நடிப்பு உன்னதம். பரபரப்பான இறுதிச் சண்டைக் காட்சியின் பின்பாக டெப் ஆடும் அந்த நடனம் சூப்பரோ சூப்பர்.

விந்தை உலகம், சாகசம், நகைச்சுவை, ஆக்‌ஷன், மந்திரம் எனத் தொய்வில்லாது படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர், இருப்பினும் வெள்ளை ராணி வரும் காட்சிகளில் சலிப்பு சற்றுத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. இதனை ஆலிஸின் அற்புத உலகம் என்பதை விட டிம் பெர்டெனின் அற்புத உலகம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ஒரு கூட்டுப் புழுவானது, தனது புது வாழ்விற்காக, அது அடைபட்டிருக்கும் கூட்டைக் கிழித்து, அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாறி காற்றில் பறந்து செல்வதைப் போலவே தன் கனவுகளை நோக்கிச் சுதந்திரமாக பறந்து செல்கிறாள் இந்த ஆலிஸ். அற்புத உலகில் ஆலிஸ், கேளிக்கைக்கு உத்தரவாதம்.

No comments:

Post a Comment