Sunday, August 21, 2011

தங்கம் இனி நமக்கு கனவா???

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு;
பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது.



தங்கம் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ரெக்கை கட்டி பறக்கத்தான் செய்கிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி எதிரொலி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதனால் பலரும் தங்கள் பணத்தை தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். ஆபரணத்திற்காக தங்கம் என்று இல்லாமல் சிறந்த சேமிப்பு என்று பலரும் தங்கத்தை கருத தொடங்கியதால் தங்கம் விற்பனை படுவேகமாக சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

நிலத்தில் பணத்தை கொட்டி முதலீடு செய்பவர்கள் கூட இப்போது நாளுக்குநாள் விலையேறும் தங்கத்தின் மீது பணத்தை கொட்ட தொடங்கியிருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு முதல்முறையாக ஒரு பவுன் ரூ.10 ஆயிரத்தை கடந்து, விற்பனையாகியது.

அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 332 ரூபாய்க்கு விற்பனையானது. 2010-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் 12 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பவுன் தங்கம் 16 ஆயிரம் ரூபாயை கடந்தது.

கடந்த மே மாதம் 28-ந்தேதி அன்று 17 ஆயிரம் ரூபாயை கடந்து, பவுனுக்கு 17 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3-ந்தேதி அன்று ரூ.18 ஆயிரத்தை கடந்து 18 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்திலே தங்கம் விலை உயர்ந்து வந்தது. 5 நாட்களிலேயே (கடந்த 9-ந்தேதி அன்று) முதல்முறையாக 19 ஆயிரம் ரூபாயை கடந்து, 19 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது.



இப்போது ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 491 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் 19 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, 20 ஆயிரத்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும்.

இதன் மூலம் தங்கம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களையும், பெண்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கம் இனி வாங்க முடியுமோ என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் எழுப்பியுள்ளது. தங்கம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிட்டது.

எனினும் தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமணங்கள் தங்கத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுவதால் பெண்பிள்ளையை பெற்று எடுத்த ஏழைமக்கள், "தங்கள் பிள்ளையை எப்படி கரைசேர்ப்பது'' என்று விழிபிதுங்கி உள்ளனர்.

தங்கம் என்று இனி பெயர்சூட்டிதான் அழகுபார்க்கமுடியுமே தவிர ஆபரணமாக சூட்டி அழகுபார்க்க முடியாது என்று பொதுமக்கள் ஏக்கத்துடன் கூறி வருகின்றனர். தங்கத்தின் இந்த வரலாறு காணாத விலை உயர்வு குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறியதாவது:-

தமிழ் மாதங்களான ஆனி, ஆடி மாதங்கள் தங்க விற்பனை ஓரளவு சுமாராக நடைபெற்றது. ஏனெனில் இந்த மாதங்கள் சுபகாரியங்கள் செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இல்லை என்று கருதப்பட்டு வருவதால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது. தற்போது ஆவணி மாதம் பிறந்துவிட்டது.

இந்த மாதம் சுபமுகூர்த்த மாதம் என்பதால், திருமணம் மற்றும் விழாக்களுக்காக தங்கம் வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே தங்கம் விலையில் ஏற்றம் இருக்குமே தவிர இறக்கம் இருக்க வாய்ப்பில்லை

எனவே தங்கம் என்பது இனி வீட்டில் எழுதி தான் பார்க்க வேண்டும் போல..அது நடுத்தர வர்க்கத்துக்கும் ஏழைமக்கள் வாங்க முடியாமல் வெறும் கனவாக ஆகிவிடும் போல உள்ளது...

நன்றி .. உங்கள் கருத்துகளை பகிரவும்...

1 comment: