Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011:ஆஸ்திரேலியா (World Cup 2011- Team Australia)



இதோ இன்றோடு உலகக்கோப்பை காய்ச்சல் ஆரம்பிகிறது.எனவே அதற்குமுன் நான் ஒவ்வொரு அணி பலம் ,பலவீனம் பற்றி இங்கு காண்போம்.

ஆஸ்திரேலியா :

கடந்த 3 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் வென்று ஹேட்ரிக் சாம்பியன்களான ஆஸ்ட்ரேலியா இந்த முறை அதே பலத்துடன் களமிறங்குகிறது என்று கூற இயலாது.2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இருந்த வீரர்களில் தற்போது ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், கிளார்க், மைக் ஹஸ்ஸி, பிரெட் லீ, ஷான் டெய்ட் ஆகியோர்கள் அணியில் உள்ளனர்.சமீப காலங்களாக ஆஸ்ட்ரேலிய அணி தனது பழைய ஆக்ரோஷத்தையும், வெற்றியத் தவிர வேறு சிந்தனையில்லை என்ற அணுகுமுறையையும் இழந்து வருகிறது.2003, 2007ஆம் ஆண்டுகளில் தோல்வியே தழுவாமல் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்ட்ரேலியா. இந்த முறை அது போன்று முழு ஆதிக்கம் சாத்தியமில்லை என்றாலும், அந்த அணியில் ஒரு சில தனிநபர்கள் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் திறமை கொண்டவர்கள்.



குறிப்பாக பந்து வீச்சில் பிரெட் லீ, ஷான் டெய்ட், ஜான்சன், போலிஞ்சர் ஆகியோர் வேகத்துறையிலும் நேதன் ஹாரிட்ஸ் ஸ்பின் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள்.ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஷேன் வாட்சன், டேவிட் ஹஸ்சி, ஓரளவுக்கு கேமரூன் ஒயிட் ஆகியோர் உள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் என்ற புதுமுகம் அதிரடி பேட்டிங் திறமை உள்ளவர், ஓரளவுக்கு சுமாரான லெக்-ஸ்பின்னும் வீசக்கூடியவர்.பாண்டிங்கை வீழ்த்தினால் எதிரணிக்கு வெற்றி உறுதி என்ற நிலையில் தற்போது ஷேன் வாட்சனையும் வீழ்த்த வேண்டும் என்ற கூடுதல் பலம் இந்த அணிக்கு உருவாகியுள்ளது.மைக்கேல் கிளார்க் ஃபார்ம் பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா சரிந்து வரும் அதே வேளையில் ஒரு நாள் போட்டிகளில் சரிவு அவ்வளவு உறுதியாக நடைபெறவில்லை.ஆனால் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வி மேலும் இலங்கைக்கு எதிராக தங்கள் உள்நாட்டில் அடைந்த தொடர் தோல்வி ஆகியவை தவிர அந்த அணிக்கு பெரிய சரிவு ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரிலும் கூட முதல் 3 போட்டிகளில் எளிதாகவே வென்றது ஆஸ்ட்ரேலியா. இதிலும் வாட்சன், மைக் ஹஸ்ஸி ஃபார்ம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.



உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 ஆட்டங்களில் 48 என்ற சராசரியுடன் 1,537 ரன்கள் எடுத்துள்ளார். இவர் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பது தெரிகிறது. எனவே ஆஸ்ட்ரேலிய வெற்றியில் இவரது ஆட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இவரும் சமீப காலங்களில் பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆஸ்ட்ரேலியாவுக்கு கவலை தரும் ஒரு அம்சமாகும்.ரிக்கி பாண்டிங்கிடம் இன்னொரு சாதகமான அம்சம் அவரது ஃபீல்டிங், அது இன்னமும் கூர்மையாகவே உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் சமீபத்தில் 3 ரன் அவுட்களை செய்து போட்டியை வெற்றிபெறச்செய்தார்.உலகக் கோப்பை போட்டிகளில் 39 ஆட்டங்களில் பாண்டிங் 25 கேட்ச்களை பிடித்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்.அதே போல் ஷேன் வாட்சன் 2007 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக உருவாகியுள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். 2007ற்குப் பிறகு 1000 ரன்கள் 50 விக்கெட்டுகள் என்ற இரட்டையை சாதித்துள்ளார் ஷேன் வாட்சன்.குறிப்பாக இந்திய, இலங்கை ஆட்டக்களங்களுக்குத் தேவையான ஒரு திறமையையும் ஷேன் வாட்சன் பெற்றுள்ளார். அதாவது மே 1, 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷேன் வாட்சன் ஆஸ்ட்ரேலியா இலக்கைத் துரத்தும்போது 22 போட்டிகளில் 1,119 ரன்களை 62.16 என்ற சராசரியுடன் வைத்துளார். இவருக்கு அடுத்தபடியாக விரட் கோலி உள்ளார்.எனவே வாட்சன், பாண்டிங், மைக் ஹஸ்ஸி, ஓரளவுக்கு பிராட் ஹேடின், பின்னால் அதிரடிக்கு கேமரூன் ஒயிட், டேவிட் ஹஸ்ஸி என்று ஆஸ்ட்ரேலியாவின் பேட்டிங்கையும் குறை கூறுவதற்கில்லை.குறிப்பாக இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற பேட்டிங் ஆதரவு களங்களில் ஆஸ்ட்ரேலியாவின் வெற்றி வாய்ப்பை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.மேலும் பிரெட் லீ, ஷான் டெய்ட் இருவருமே 150 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள். இவர்கள் பந்துகளை பவர் பிளேயிலோ அல்லது முடிவு ஓவர்களிலோ அடிப்பது கடினம் என்பதை விட துவக்கத்தில் இவர்களது பந்துவீச்சு வேகம் சில எதிரணி விக்கெட்டுகளைச் சாய்த்தால் ஆஸ்ட்ரேலிய வெற்றி உறுதியாகிவிடும். எனவே இந்த உலகக் கோப்பை போட்டிகளில் பிரெட் லீ, ஷான் டெய்ட் இணையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.ஆஸ்ட்ரேலிய அணியின் பிரிவில் பாகிஸ்தான், நியூஸீலாந்து, இலங்கை ஆகிய அணிகளே சரியான சவாலகத் திகழ வாய்ப்புள்ளது. இதில் இலங்கை மட்டுமே ஆஸ்ட்ரேலியாவுக்கு அச்சுறுத்தல். பாகிஸ்தான் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. அந்த அணி எதையும் ஊகிக்க முடியாத ஒரு அணியாகும். நியூஸீலாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை சிறப்பாக செயல்பட்டிருந்தாலும்ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அந்த அணி ஒன்றும் செய்ய முடியாமல் போனபோட்டிகளே அதிகம். எனவே நியூஸீலாந்து ஆஸ்ட்ரேலியாவுக்கு பெரியஅச்சுறுத்தல் இல்லை என்றே கூறலாம்.எனவே இந்தப் பிரிவில் ஆஸ்ட்ரேலியா முதலிடம் பிடித்தால் காலிறுதியில் பி-பிரிவில் கடைசியாக வரும் அணியுடந்தான் மோத வேண்டி வரும்.



அது வெஸ்ட் இண்டீஸாகவோ, இங்கிலாந்தாகவோ, தென் ஆப்பிரிக்காவாகவோ ஏன் இந்தியாவாகவோ இருக்கலாம்.அந்த நிலையில் ஆஸ்ட்ரேலியாவுக்கு இந்தியா மட்டுமே அச்சுறுத்தலாக இருக்க முடியும். தென் ஆப்பிரிக்கா எப்போதும் சவாலான போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவிடம் தோல்வி தழுவி வெளியேறியதை நாம் கண்டிருக்கிறோம்.காலிறுதியில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றுவிட்டால், கோப்பையை வெல்ல நிச்சயம் அது கடுமையாக போராடும். மேலும் இதில் வெற்றி பெற்றால் 4-வது உலகக் கோப்பை வெற்றியாகும். எனவே இந்தக் கனவை தனது இளம் அணியுடன் நிறைவேற்றி பாண்டிங் தனது ஆஷஸ் தோல்விக்கு ஒரு பதிலீடாக வைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.எப்படியும் இந்த அணி மோசமாக தோற்று வெளியேற வாய்ப்பில்லை என்று இப்போதைக்குக் கூற முடியும்.

No comments:

Post a Comment