Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011: இங்கிலாந்து (World Cup 2011- Team ENGLAND)


உலகக்கோப்பை 2011 அணி நிலை :



1971ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை 548 ஒரு நாள் போட்டிகளில் 264இல் வெற்றி பெற்று 261-இல் தோல்வி தழுவியுள்ளது.இதன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் எடுத்துப் பார்த்தால் இந்தியாவுடன் 70 போட்டிகளில் 30-இல் மட்டுமே வென்றுள்ளது 38 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் 44 போட்டிகளில் 23-இல் தோல்வி தழுவி 18-இல் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீசுடன் 82 போட்டிகளில் 37-இல் வென்று 41-இல் தோல்வி தழுவியுள்ளது. எனவே பி-பிரிவில் உள்ள முக்கிய அணிகளுக்கு எதிராக தோல்விகளே அதிகம் பெற்றுள்ளது இங்கிலாந்து.

இந்தியாவில் விளையாடிய 45 போட்டிகளில் 19-இல் வென்று 26-இல் தோல்வி தழுவியுள்ளது. இலங்கையில் விளையாடிய 15 போட்டிகளில் 5-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 68 போட்டிகளில் 38-இல் வென்று 28-இல் தோல்வி தழுவியுள்ளது. பாகிஸ்தானில் விளையாடிய 25 போட்டிகளில் 13இல் வென்று 12-இல் தோற்றுள்ளது.



எனவே புள்ளிவிவரங்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக இல்லை. எனினும்...

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 2006ஆம் ஆண்டு முதல் (இடையில் இல்லாமல்) 2011ஆம் ஆண்டு வரை 54 போட்டிகளில் தலைமை வகித்ததில் 24இல் வெற்றி பெற்று 29-இல் தோல்வி தழுவியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் நாசர் ஹுசைன், மைக்கேல் வான் ஆகியோர்களே இங்கிலாந்தை அதிக போட்டிகளில் வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

இந்த அணியின் வித்தியாசம் என்னவெனில் ஸ்ட்ராஸின் தலைமையில் ஒரு அணியாகத் திரண்டு எழுந்து ஆஸ்ட்ரேலியாவை ஒரு-நாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியதோடு, பாகிஸ்தானையும் வீழ்த்தியது. தற்போது ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தோல்விகளை விட்டு விடுவோம். ஏனெனில் இந்தியாவின் ஆட்டக்களங்கள் வேறு, ஆஸ்ட்ரேலியாவின் ஆட்டக்களங்கள் வேறு.இந்த முறை ஸ்ட்ராஸுக்குத் தக்க துவக்க வீரரை தேர்வு செய்யாமல் போனது இங்கிலாந்தின் பெரிய தவறாகும். விக்கெட் கீப்பர் பிரையரை துவக்கத்தில் களமிறக்குவது சரியல்ல.



மற்றபடி ஜொனாதன் டிராட்டின் சமீபத்திய ஃபார்ம், கெவின் பீட்டர்சனின் மிகப்பெரிய வரம்பு மீறிய ஆட்டம், ஸ்ட்ராஸின் அதிரடித் துவக்கம், இயன் பெல், காலிங்வுட் ஆகியோரது பேட்டிங், இயான் மோர்கன் என்ற நடுக்கள அதிரடி வீரர் என்று இங்கிலாந்து பேட்டிங் பலமகாவே உள்ளது. ஆல்ரவுண்டர் இடத்திற்கு டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளனர்.

பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் ஆஃப் ஸ்பின் இந்த முறை இந்திய ஆட்டக்களங்களில் பெரிய அளவுக்கு இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவர் தவிர ஜேம்ஸ் ஆண்டர்சன் சோபிப்பது கடினம். டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், யார்டியின் இடது கை சுழற்பந்து லுக் ரைட்டின் ஆல்-ரவுண்ட் திறமை ஆகியவற்றினால் ஒரு சிறந்த அணியாக இங்கிலாந்து விளங்குகிறது.

ஸ்ட்ராஸ், இயன் பெல் துவக்கத்தில் களமிறங்க, டிராட், பீட்டர்சன், இயான் மோர்கன், காலிங்வுட், பிரெஸ்னன், பிராட், ஸ்வான், யார்டி, என்ற அணியைக் களமிறக்கினால் பலம் நிறைந்த அணியாக இங்கிலாந்து இருக்கும். யார் விக்கெட் கீப்பர் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? டிராட் விக்கெட் கீப்பிங் செய்வார். இல்லையென்றால் மேட் பிரையரை அணியில் சேர்த்தால் ஜேம்ஸ் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி விட வேண்டும். பேட்டிங் வரிசையை தொந்தரவு செய்யக் கூடாது.

இந்திய ஆட்டக்களங்களில் 2 ஸ்பின்னர்கள் நிச்சயம் கைகொடுக்கும். பிராட், பிரெஸ்னன் ஆகியோர் வேகப்பந்திற்கு உள்ளனர். இதில் யாராவது சோடை போகும்போது பீட்டர்சனையும், காலிங்வுட்டையும் பந்து வீச அழைத்து ஒரு மாற்றைக் காண்பிக்கலாம்.



ஆனால் இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஏன் மேற்கிந்திய அணியே சவாலாக இருக்கும். காலிறுதியில் இலங்கையை எதிர்கொண்டால் கடினம். ஆஸ்ட்ரேலியா, அல்லது பாகிஸ்தான் என்றால் இங்கிலாந்துக்கு சற்றே வாய்ப்புகள் கூடும். ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவுடன் அதிகம் விளையாடியுள்ளதால் இந்திய தட்பவெப்பத்தில் கிரேம் ஸ்வானை வைத்து வென்று விடலாம்.

எனவே காலிறுதி முட்டுக் கட்டையைக் கடந்து விடும் திறமையான அணிதான் இங்கிலாந்து, அப்படி காலிறுதியில் வெற்றி பெற்று விடும் எனில் ஏன் இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment