Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011:பாகிஸ்தான் (World Cup 2011- Team PAKISTAN)

பாகிஸ்தான் 2011 உலகக் கோப்பை வாய்ப்புகள்:



இந்த முறை எந்த உலக கோப்பையைக் காட்டிலும் கணிக்க முடியாத அணி என்ற நிலவரத்தில் உச்சத்தை எட்டியுள்ளது பாகிஸ்தான்.ஏனெனில் நினைத்துப்பார்க்க முடியாத இடத்திலிருந்து வெற்றி பெறுவதும் அதேபோல் தோல்வியே இனி சாத்தியமில்லை என்ற நிலையிலிருந்து தோல்வி தழுவுவதும் பாகிஸ்தான் அணிக்கு சகஜமாகிவிட்டது என்பதாலேயே கணிப்பு கடினமாகி விடுகிறது.

ஹஃபீஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷேஜாத் ஒரு புதுமுகம், யூனிஸ் கான் மட்டுமே அனுபவ வீரர். உமர் அக்மல் ஒரு கறுப்புக் குதிரை அவர் மட்டும் மனது வைத்தால் தனி ஆளாகவே வெற்றி பெற வைக்க முடியும். ஆனால் சமீபமாக அவரது ஆட்டம் திறமைக்கேற்ப இல்லை.



அஃப்ரீடி ஆட்டம் சூடு பிடித்தால் எந்த ஒரு பந்துவீச்சும் அன்று சுண்ணாம்புதான். அதே போல் அப்துல் ரசாக். இவர் போட்டியை எந்த சரிவிலிருந்தும் வெற்றியாக மற்றக்கூடிய திறமை படைத்த அதிரடிப் புலி. இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சமீபமாக துபாயில் அடித்த அதிரடி 10 சிக்சர்கள் கொண்ட சதம் ஸ்மித்தின் துர்கனவாக இன்றும் இருக்கும் என்று நம்பலாம்.அனைத்தையும் மீறி இந்த வீரர்கள் ஒருநாளில் படு மோசமாக சோடை போகலாம், மறு நாளில் பயங்கரமாக எழுச்சியுறலாம். ஒருவரும் கணிக்க முடியாது.

எழுச்சியுறும் ஆட்டம் காலிறுதியாக இருந்தால் அன்று வெளியேறும் அணி துரதிர்ஷ்டம் வாய்க்கபெற்றது என்று கூறுவது தவிர வேறு வழியில்லை.

நியூஸீலாந்தை இந்த அணி வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் ஆனால் ஆஸ்ட்ரேலியா, இலங்கையுடன் போராட வேண்டி வரும். இவர்கள் பிரிவில் ஜிம்பாப்வே வேறு உள்ளது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.



இவையெல்லாவற்றையும் மீறி, பி.சி.சி.ஐ. பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறைமுகமாக அழிக்கச் செய்து வரும் சூழ்ச்சிகளும், ஐ.சி.சி. அதற்கு துணை போவதும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலே அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முகத்தில் கரியை பூசுவதாக அமையும்.

சூதாட்டம் மற்றும் சூழ்ச்சிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எந்த அணியை விடவும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட வேன்டிய கடும் தேவையும் நெருக்கடியும் உள்ள அணி பாகிஸ்தான் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment