Saturday, February 19, 2011

உலகக்கோப்பை 2011: வெஸ்ட் இண்டீஸ் (World Cup 2011- Team Westindies)

2011 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ்.



2000ஆம் ஆண்டு முதல் 2011 தற்போது வரை மேற்கிந்திய அணி 252 போட்டிகளில் 100 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 135போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது. 2010/11 ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் 6-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 12 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

எனவே புள்ளிவிவரங்கள் அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஆனால் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் என்ற ஒருவர் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 15 ஆட்டங்களில் 434 ரன்களையே அவர் எடுத்துள்ளார். ஒரு சதம் 2 அரைசதம்தான் எடுத்துள்ளார். ஆனால் 223 ஒருநாள் போட்டிகளில் 19 சதம் 42 அரை சதங்களுடன் 7917 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39. ஸ்ட்ரைக் ரேட் 83.74. இவரது கூடுதல் பலம் ஜெயசூரியா போல் ஆஃப் ஸ்பின் பந்து வீச்சை சிக்கனமாக வீசுவதோடு முக்கிய விக்கெட்டுகளையும் சில சமயங்களில் வீழ்த்தி விடுவார்.



இவரை விட அனுபவசாலியான சந்தர்பால் அணியில் உள்ளார். ஆனால் அவரது ஃபார்ம் அவ்வளவாக சரியில்லை. சர்வாணின் அனுபவமும் கைகொடுக்கும் ஆனால் இவரெல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை. நடுக்கள வரிசையில் டேரன் பிராவோ என்ற புதிய இடது கை அதிரடி வீரரின் வருகை பலம் சேர்க்கும் ஆனால் உலகக் கோப்பை அழுத்தம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா அளிக்கும் நெருக்கடி என்று இவரைப்பற்றி எளிதில் ஊகிக்க முடியவில்லை. துவக்கத்தில் அட்ரியன் பரத் நம்பிக்கை அளிக்கிறார்.

புதிய அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் இருபது ஓவர் ஆட்டங்கள் அளவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை பெரிதாக அச்சுறுத்தவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் நம்ப முடியாது. திடீரென ஆட்டம் பிடித்து விட்டால் 10 ஓவர்கள் 100 ரன்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். டெவன் ஸ்மித் என்றஹிட்டரும், ஆல்ரவுண்டரும் உள்ளார்.



பந்து வீச்சில் கேமர் ரோச், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் தவிர மற்ற வீச்சாளர்கள் அதிகம் அறிமுகமில்லாதவர்கள் இந்த இடமும் மிடில் ஆர்டரும் மேற்கிந்திய அணியின் பலவீனங்கள்.

வங்கதேசத்திடமும் தோல்வி தழுவும் வாய்ப்புகளுடன்தான் இந்த அணி களமிறங்குகிறது. எப்படியும் காலிறுதிக்குள் நுழைந்து விட்டாலும் அதில் முதல் போட்டியிலேயே கிறிஸ் கெய்லுக்கு ஆட்டம் பிடித்துக் கொண்டால் இந்த அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். எனவே எதுவும் கூறவியலாது. ஆனால் வங்கதேசம், அயர்லாந்து அணிகளும் இந்த அணிக்கு சவால் ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலிறுதியில் ஏதாவது ஒரு பெரிய அணியை வெளியேற்றி அரையிறுதியில் மோசமாகத் தோல்வியைக்கூட இந்த அணி தழுவலாம். இதனால்தான் இந்த அணியை நாம் குறைத்தும் மதிப்பிட முடியாது, வெற்றி பெறும் என்று உறுதியாகவும் கூறிவிடமுடியாது.



இந்த அணியை பி-பிரிவில் ஒரு எக்ஸ்-ஃபேக்டர் என்று கருத இடமுண்டு. ஆனால் ஏகப்பட்ட எக்ஸ்-ஃபேக்டர்கள் உள்ளது, வங்கதேசமும், அயர்லாந்தும் எக்ஸ்-ஃபாக்டர்கள்தான். மேற்கிந்திய அணியை ஒப்புநோக்கும்போது வங்கதேச அணி சற்றே ஒருங்கிணைப்பு பெற்றுள்ள அணி என்று கூறலாம். எனவே இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு பிற 3 அணிகள் அச்சுறுத்தல் என்றால் மேற்கிந்திய அணிக்கு ஹாலந்து தவிர அனைத்து அணிகளும் அச்சுறுத்தல்தான்.இந்த நிலையில்தான் இந்த அணி களமிறங்குகிறது.

No comments:

Post a Comment